-யாழ் நிருபர்-
தமிழ் தேசியம் என்று பேசுவார்கள் விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்ததை தவிர வேறு எந்த உரிமைகளையும் வென்றெடுக்கவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றவர்களை இரண்டு வகையாக பிரித்துக் கொள்ள முடியும். தமிழ்த் தேசிய அரசியலை நாங்கள் முன்னெடுக்கப் போகின்றோம்,
எங்களுடைய மாவீரர்களின் கனவுகளை நாங்கள் சுமந்து செல்ல போகின்றோம், அந்த விடுதலையை வென்றெடுக்க போகின்றோம் என ஒரு தரப்பு பாராளுமன்றம் சென்றது.
15 ஆண்டுகளாக நாங்கள் தமிழ்த் தேசியம் வேண்டும் என்று நாங்கள் வாக்களித்துக் கொண்டிருந்தோம், ஆனால் எதனை இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று சாதித்தார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும்.
2001ஆம் ஆண்டு எங்களுடைய தலைவரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அது இன்று அது இந்த தேர்தல் பரப்பிலேயே இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கிறது, இதுவா தமிழ் தேசியத்தை வென்றெடுக்கின்ற தரப்புகளின் சாதனை?
எங்களுடைய தேசிய காட்சிகள் எனக் கூறியவர்கள் இன்று எங்களைப் பிரித்து, அழித்து நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியம் பேசி சமஷ்டியை பெற முடியவில்லை. ஆகக் குறைந்தது மாகாண சபையின் காலம் முடிந்த பின்னர் அதனை நடததுவதற்கு கூட இந்த அரசியல் தலைவர்களிடம் வக்கில்லாமல் காணப்பட்டது.
தமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியம் எனக்கூறி எதையுமே சாதிக்காமல் மீண்டும் ஒரு தடவை எங்களுக்கு ஆணை தாருங்கள் என உங்கள் முன் வந்திருக்கின்றார்கள். நாங்கள் இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் அவர்களுக்கு ஆணை கொடுத்தால் தமது கட்சி பிரச்சினையை நீதிமன்றத்தில் வழக்காடி தீர்த்துக் கொள்ள முயல்வார்களே தவிர, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவர்கள் முயற்சி செய்யப் போவதில்லை, என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்