சூரிய சக்தி சங்கம் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

-அம்பாறை நிருபர்-

லங்கா சூரிய சக்தி சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டமொன்று இன்று புதன்கிழமை இலங்கை மின்சார சபை கல்முனை காரியாலய முன்றலில் இடம்பெற்றது.

கல்முனை மின் பிராந்தியத்திலுள்ள சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களாகிய தங்களுக்கு Roof top Solar உற்பத்தியாளர்களின் கொடுப்பனவுகள் நீண்ட கால நிலுவை, புதிய கொள்வனவு விலை மாற்றம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கையில் அதிகமாக சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலைபேறான சக்தி உருவாக்க அபிவிருத்தி திட்டத்தில் பங்குதாரர்களாக இருக்கின்ற தாங்கள் தற்காலத்தில் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளுமாறு போராட்டத்தில் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக கல்முனை பிராந்தியத்தில் மாத்திரம் சுமார் 13 MW அதிகமாக இலங்கை மின்சார சபைக்கு இந்த சங்க உறுப்பினர்கள் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது .

அதேபோல் ஒவ்வொரு மாதமும் இலங்கை மின்சார சபையிடமிருந்து 40 மில்லியனுக்கு அதிகமான ரூபாவினை ஒதுக்க வேண்டிய தேவையும் உள்ளது .

மேலும் முழு கிழக்கு மாகாணத்திற்கும் ஒவ்வொரு மாதமும் 70 மில்லியனுக்கு மேல் இலங்கை மின்சார சபை செலுத்த வேண்டி இருக்கின்றது .

தற்போது இலங்கை மின்சார சபை தமது கட்டணத்தினை உச்சமாக சீரமைத்துள்ள இந்த தருணத்தில் சேவை வழங்குனர்களாகிய இவர்களது பிரச்சினைகளையும் நாட்டில் காணப்படுகின்ற அதிகரித்த பணவீக்கம் மற்றும் பொருட்செலவுகள், பராமரிப்பு செலவுகளையும் கருத்தில் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்தனர்.

ஒன்பது மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள Roof top Solar உரிய கொடுப்பனவினை மேலும் தாமதம் இன்றி இ.மி.சபை முன்னுரிமைப்படுத்தி வழங்குதல், தற்போதுள்ள அதிகரித்த பணவீக்கம் மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக இருக்கின்ற மிகப்பெரிய விலையேற்றத்திற்கு சமாந்தரமாக தற்போது வழங்கப்படும் 22 ரூபாய் கொடுப்பனவை புதிய விலையேற்றத்திற்கு ஏற்றாற்போல் திருத்தம் செய்தல், இலங்கை மின்சார சபையுடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தினை மீள் பரிசீலனை செய்து பொருத்தமான திருத்தங்களை கொண்டு வருதல், முறைப்படுத்தப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக தொடராக கொடுப்பினை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி Roof top Solar உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரிய தரப்புகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டி ஆர்பாட்டத்தின் பின்னர் இலங்கை மின்சார சபை பிராந்திய பிரதம பொறியலாளர் ஏ.எம். ஹைக்கரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்