சித்திரை புத்தாண்டு 2024: ராசி பலன்கள்

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருச்சிக லக்னம் என்பதால் கடல் சார்ந்த பகுதிகளில் நல்ல மழை பொழியும். ஆறாமிடத்தில் சூரியன் உச்சம் பெற்று குருவுடன் இணைவது சகோதரர்களின் உடல் நலனில் பாதிப்பைத் தரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதனுடன் சுக்கிரன் இணைவது உயர்கல்வியில் சில மாற்றங்களை உண்டாக்கும். சனியுடன் செவ்வாய் இணைவு பெறுவதால் இனம் தெரியாத புதிய நோய்கள் உண்டாகும். மருத்துவத்துறையில் சில சவால்களை சந்திக்க வேண்டிவரும்.

எட்டாமிடத்தில் சந்திரன் அமர்வதால பணப்புழக்கம் குறையும். தொழிலில் சில கூட்டுத் தொழில்களில் மந்த நிலை நீடிக்கும். லாப ஸ்தானத்தில் கேது அமர்வதால் வெளிநாட்டு இறக்குமதியும் ஏற்றுமதியும் அதிகரிக்கும். அந்நிய செலாவணிகள் அதிகரிக்க திட்டம் வகுக்கப்படும்.

இந்த ஆண்டு வெள்ளம் பெருகும். நீர் நிலைகளில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு அதிக பாதிப்பைத் தரும். மீன் வளம் நன்கு காணப்படும். விவசாயம் மழை குறைந்தும் கெடும்; அதிக மழை பெய்தும் கெடும்… இந்த ஆண்டு அதிக உஷ்ணமும், கடும் குளிரும் மாறி மாறி இருக்கும். உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் திடீர் கட்டுப்பாடுகளால் அவற்றின் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் திண்டாடும். தொழில் ஸ்தாபனங்களில் ஆண், பெண் இரு பாலாருக்கும் வேலைவாய்ப்புக்கள் அமையும். காதல் திருமணங்கள் அதிகரிக்கும்.

பரிகாரம்:

எல்லா ராசிக்காரர்களும் பைரவர் வழிபாடு செய்வதும் பெருமாளுக்கும் சிவனுக்கும் உரிய காலங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்வதும் நன்மைகளை உண்டாக்கும்.

மேஷம்

விரைவாக எதையும் செய்து முடிக்க வேண்டுமென்று நினைக்கும் மேஷ ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமர்வது சிறப்பான பலனாக அமையும். மறைவு ஸ்தானத்தில் குரு பார்வை அமைவது உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். லாப ஸ்தானத்தில் சனியுடன் ராசிநாதன் இணைவது போட்டிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல வளம் பெறுவீர்கள். உங்களின் தேவைகளுக்கான வீட்டுப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் அமையும்.

திருமணத் தடை நீங்கி பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும். விளையாட்டுத்துறையில் நீங்கள் சாதனைகளை செய்வீர்கள். பாதுகாப்புத்துறையில் நல்ல சூழ்நிலைகள் உருவாகும். திடீர் இடமாற்றம் உண்டாகும். சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கி, மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். அதிகமான அலைச்சல்களை குறைத்துக்கொள்வீர்கள். கால நேரமின்றி உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

மேலதிகாரிகளிடம் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வீர்கள். கலைத்துறையினர் தங்களின் மனம் போல் சில சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்வீர்கள். உங்களின் திடமான நம்பிக்கையும், விடாப்பிடியான முயற்சியும் உங்களை பல கட்டத்தில் மேன்மையடையச் செய்யும். சகோதர, சகோதரி உறவு பலப்படும். தாயார் வீட்டு சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நண்பர்களின் சேர்க்கை மூலம் சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடு தொடர்ந்து செய்து வருவது நல்லது. மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் அனுகூலமாக அமையும்.

ரிஷபம்

பிறரை விட மேலோங்கி இருக்க வேண்டுமென்று நினைக்கும் ரிஷப ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு மேன்மை தரும் ஆண்டாக அமையும். தேவையற்ற தொடர்புகளைத் துண்டித்துவிடுவீர்கள். ஆக்கப்பூர்வமான செயல்களை மேம்படுத்திக்கொள்வீர்கள். யாரையும் வெறுத்து ஒதுக்காமல் முடிந்த வரை அனுசரித்து செல்வீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல யோக காலமாக அமையும். வேகமாக வளரும் இந்த காலத்துக்கு தகுந்தபடி உங்களை மாற்றி அமைத்துக்கொள்வீர்கள். புத்துணர்வுடன் செயற்படுவீர்கள்.

உங்களின் ராசிநாதன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது இதுவரை அடைய முடியாமல் போன எல்லா விடயங்களிலும் வளர்ச்சி பெற்று நலம் பெறுவீர்கள். தனாதிபதி லாப ஸ்தானத்தில் நீசம் பெற்று நீச பங்க ராஜயோக பலனை தருவதால், சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்த வீடு வாங்குதல், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குதல் என பல நன்மைகள் உண்டாகும். முக்கிய பிரமுகரின் சந்திப்பு பிற்காலத்தில் நல்ல பலனை பெற்றுத் தரும்.

குரு பெயர்ச்சிக்கு பின்பு வேலைவாய்ப்பும், சொந்த தொழிலும் அமையப் பெறுவதும், சீக்கிரம் திருமணம் அமையப் பெறுவதும் உண்டாகும். கணவன் – மனைவி உறவு பலப்படும். குழந்தைகள் கல்வி வளம் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். சிலருக்கு மேலும் பொறுப்புகள் அதிகரிக்கும். பெண்களின் வாழ்க்கை சூழ்நிலைகள் மாறி வளம் பெறுவீர்கள். உடலை சரியாக பராமரித்து நற்பலன் பெறுவீர்கள். பொருளாதார நிலை நன்கு உங்களுக்கும் பயன்படும்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி, தொடர்ந்து வேண்டிக்கொள்ள சகல நலன்களும் உண்டாகும்.

மிதுனம்

கனவுகளை நனவாக்க விரைந்து செயற்படும் மிதுன ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு லாப ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி குருவுடன் சூரியன் இணைந்திருப்பது ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தை பார்ப்பது போன்ற காரணங்களால் எதிர்பாராத தன வரவும் நீண்டநாள் வராத பணமும் விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள். லாபாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து விரைய ஸ்தானத்தை பார்வையிடுவதால் சில நேரம் எதிர்பாராத சிறு தடைகள் வந்து உடனே மறையும். சுக ஸ்தானத்தில் கேது அமர்வது சில நேரம் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டி வரும்.

உங்களின் ராசிநாதனின் பார்வை கேது மீது படுவதால் தொழிலாளர்களின் பலம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் வேண்டுதல்களை பரிசீலனை செய்ய வேண்டிவரும். அமைதியான சூழ்நிலைகளை அதிகம் விரும்புவீர்கள். இதற்காக சில அமைதியான இடங்களை தேடி செல்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளும், பழைய தடைபட்ட விடயங்களும் விரைவில் கிடைக்கப்பெறும்.

புதிய திட்டங்களை செயற்படுத்தி தேவையான விடயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மனித நேயமுள்ள பல காரியங்களை செய்து வளம் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். கவலைகளை மறந்து சுதந்திரமாக செயற்படுவீர்கள்.

கடந்த கால நிகழ்வுகளை மறக்க நினைத்து செயற்படுவீர்கள். துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான சில உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களுக்கு நல்ல வலிமையைத் தரும். சிறு சிவந்த கொப்புளங்கள் வந்து மன வருத்தத்தைத் தரும். சில நாட்களில் அதுவே தானாக மறைந்துவிடும். பொருளாதார நிலை நிறைவாக இருக்கும். உங்களது பணிகள் சிறப்பாக அமையும்.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் வராகி அம்மன் மற்றும் காளி வழிபாடு செய்து, நெய் தீபம் ஏற்றி வணங்கி வர, சகல காரியங்களிலும் நன்மையும் வெற்றியும் கிடைக்கும்.

கடகம்

திட்டமிடுதலை லட்சியமாக கொண்டு விளங்கும் கடக ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு அற்புத பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் ராசிநாதன் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் உங்களின் பொருளாதாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருந்துவரும். அட்டம சனியின் தாக்கம் குரு அருளால் சற்று குறையும். உங்களின் குடும்பத்தில் சின்ன சச்சரவுகள் இருந்து வந்தாலும், அதனால் பாதிப்பு அதிகம் இருக்காது.

உங்களின் தொழில் ஸ்தானத்தில் தனாதிபதி சூரியன் அமர்வதால், உங்களின் பல நாள் கனவாக காணப்பட்ட தொழிலை தொடங்கும் முயற்சி வெற்றியைத் தரும். உங்களுக்கு பல நாட்கள் எதிர்ப்புகளையும் தொல்லைகளையும் கொடுத்து வந்த எதிரி பல சிக்கல்களில் மாட்டி உங்களுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்தி, அவரின் வேலையை கவனிப்பார்.

உங்களின் முயற்சி ஸ்தானத்தில் கேது இருப்பதால், எடுத்த காரியத்தை விரைவில் நடத்தி தருவார். புதிய முயற்சி, திட்டம் எதையும் ஆய்வு செய்யாமல் அவசர முடிவு எடுக்காதீர்கள். இதனால் நீங்கள் பண இழப்புக்கு ஆளாகலாம். முடிந்தளவு எங்காவது பணி செய்து வருவது நல்லது.

கூட்டுத் தொழில் செய்வதில் அடிக்கடி கவனம் செலுத்துவது நல்லது. ஒன்லைன் மூலமான தொழிலைத் தவிர்க்கவும். மதம் சார்ந்த பிரச்சினைகளில் தலையிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது. பொருளாதார நிலையில் மேன்மை அடைவீர்கள். தேவைகளுக்கு ஏற்ப பணவரவு இருக்கும்.

பரிகாரம்:

சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி, எள் கலந்த உணவை மிருகத்துக்கு வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களிலும் நன்மை உண்டாகும்.

சிம்மம்

தைரியத்துக்கும், துணிச்சலுக்கும் முக்கியத்துவம் தரும் சிம்ம ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிநாதன் உச்சம் பெற்றிருப்பதும் குரு பார்வை பெறுவதும் உங்களுக்கு நற்பலன்களையும் ஏற்றத்தையும் தரும். வருமானம் அதிகரிக்கும். அதுபோல நட்சத்திர அந்தரத்தில் விரையமும் அதிகரிக்கும் என்பதால், அனாவசியமான செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. அரசியல் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.

சிலருக்கு முக்கிய பொறுப்புகள் தானே வந்து சேரும். எதை செய்தாலும் அதற்கு தகுந்தபடி நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டு செயற்பட்டு நற்பலன்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் அறிமுக வளர்ச்சி பெற்று அதன் மூலம் எல்லோர் மனதிலும் இடம்பிடித்துவிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிலும் தேவையற்ற சில விடயங்களில் கவனமாக இருக்கவும்.

குறிப்பாக பெண்கள் விடயத்தில் அணுகுமுறையில் எச்சரிக்கையாய் இருப்பது மிகவும் நல்லது. பணி புரியும் இடத்தில் உங்களின் சேவை பாராட்டப்படும். குறிப்பிட்ட சில வேலைகளில் கவனம் செலுத்தி அதன் மூலம் வருமானம் பெறும் வாய்ப்புகள் அமையும். பொன், பொருள்கள் சேர்க்கை அதிகரிக்கும். வாகன வசதிகளையும் பெருக்கிக்கொள்வீர்கள். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகள் அடிக்கடி அமையும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி

வார்த்தை ஜாலத்தால் மற்றவரை எளிதில் கவரும் கன்னி ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு அடுத்து குரு பார்வை வருவதும் ஆண்டு பிறப்பில் ராசிநாதன் நீச பங்க ராஜயோக பலனை தருவதும் உங்களின் கடந்த கால சோதனைகளிலிருந்து மீண்டும் நன்மை பெறுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். முக்கிய பிரமுகர் சந்திப்பு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

கொடுத்த வேலையை சரியாக செய்து வளம் பெறுவீர்கள். பல ஆண்டுகளாக இருந்துவந்த சிக்கல்களும் விலகி, படிப்படியாக நிம்மதி அடைவீர்கள். தீர்க்கவே முடியாது என்ற கடன் கூட விரைவில் முடியும். கலைத்துறையினருக்கு நல்ல நிறுவனத்தின் தொடர்பு மூலம் தொடர் வாய்ப்புகளும் நிகழ்ச்சிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். விளையாட்டுத்துறையினர் பலவித சவால்களில் ஏற்றம் பெற்று நற்பெயர் பெறுவீர்கள்.

கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். வரவுக்கு மீறிய செலவுகள் குறையும். அரசியலில் சில ராஜதந்திரமான யோசனைகளை சொல்லி உங்களின் பலத்தை நிரூபிப்பீர்கள். குறைந்த முதலீடுகளின் மூலம் அதிக லாபம் பெறும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள், வீட்டு உபயோக பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

பணப்புழக்கம் இருக்கும். மாணவர்கள் உயர் கல்வி பயில வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். மருத்துவ கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் விஷ்ணு ஆலயத்துக்கு சென்று தீபமேற்றி வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்வதும், உங்களின் வாழ்வை வளம் பெறச் செய்யும்.

துலாம்

மாற்றத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கும் துலாம் ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் உச்சம் பெற்றிருப்பதும் லாபாதிபதி சூரியன் உச்சம் பெற்று ராசியை குருவுடன் பார்ப்பதும் நல்ல பலன்களை பெற்றுத் தரும். பல தடவை முயற்சி செய்தும் வெளிநாடு செல்ல முடியாமல் இருந்த நிலை மாறி விரைவில் வெளிநாடு செல்வீர்கள்.

கடந்த காலத்தில் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் மறைந்து, உடல் நலன் தேறி ஆரோக்கியம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பலவித தடைகள் இனி நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள். விளையாட்டுத்துறையிலும், சிலருக்கு அடிக்கடி வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். தனி கவனத்துடன் செயற்பட்டு எல்லா விதமான விடயங்களையும் சீராக செயற்படுத்துவீர்கள்.

சாதிக்க நினைத்ததை தொடர் முயற்சிகளின் மூலம் சாதித்துக் காட்டுவீர்கள். வறியவருக்கு உதவி செய்வீர்கள். முக்கியமான விடயத்தில் ஆலோசனை செய்து, பின்பு முடிவுகளை எடுப்பீர்கள். புதிய திட்டங்களுக்கு வடிவம் கொடுத்து செயற்பட தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் இருந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு, நிலுவையில் இருந்த தடை இனி நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

பலருக்கு பொருளாதாரத்தில் பின்னடைவுகள் நீங்கி, மேன்மை பெறுவதற்குரிய வாய்ப்புகள் அமையும். விளை நிலங்களில் வருமானம் பெருகும். தனித்திறமையுடன் செயல்படுவீர்கள். பணப்புழக்கம் இருக்கும். சிகிச்சை நிபுணர்களின் வருமானமும் பெருகும். மக்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும். கடவுள் வழிபாடு மூலம் நல்ல முன்னேற்றம் தென்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியருக்கு இலுப்பெண்ணெய் தீபமிட்டு சிவப்பு நிற பூ வைத்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர சகல காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

வாழ்க்கை வாழ்வதற்காக என்று உணர்ந்து செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு வரும் குரு பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் சூழ்நிலைகள் அனைத்தும் மாறும். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல், உங்களின் உடல் நலனில் முன்னேற்றம் தென்படும். எளிதில் எதையும் ஜெயிக்கும் வல்லமையும் உருவாக்கத்துக்கு தகுந்த வலிமையும் பெறுவீர்கள். பத்தாம் பார்வையாக சனி பார்ப்பதால் இதுவரை தொழில் அமையப் பெறாதவர்களுக்கு நல்ல தொழில் அமையும்.

சொன்னபடி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வழிமுறைகளை சிறப்பாக செயற்படுத்துவீர்கள். புதிய தொழில்நுட்ப பயிற்சிகளில் கலந்துகொண்டு புதிய விடயங்களை பற்றி அறிந்துகொள்வீர்கள். விளையாட்டுத்துறையினர் போட்டிகளில் சற்று முன்னேற்றம் காண்பீர்கள்.

கலைத்துறையினருக்கு பல வாய்ப்புகளும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் அமையும். விவசாயத்தில் நல்ல மழை காரணமாக விளைச்சல்கள் அதிகரிக்கும். சாதனைகளை புரிந்து பாராட்டுதல்களை சிலர் பெறுவீர்கள். முக்கிய விருத்தினராக கலந்துகொள்வீர்கள். சகோதரர்கள் விடயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. சாதுர்யமாக பேசி எண்ணியதை விரைவில் நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

காலத்துக்கு தகுந்த சில மாற்றங்களை உருவாக்கிக்கொள்வீர்கள். காவல் பணியில் இருப்பவருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் சுற்றுலா சென்று வருவீர்கள். வாகனங்களில் செல்லும்போது அவசரமின்றி செல்வது நல்லது. தான தர்மங்கள் செய்து வர உங்களின் தொழிலில் அதிக லாபம் பெறுவீர்கள். பொது வாழ்வில் கடுமையாக உழைத்து முன்னேறுவீர்கள்.

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 – 06.00 மணி வரை ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் தொடர்ந்து ஏற்றி, வழிபட்டு வர சகல காரியங்களும் வெற்றியை தரும்.

தனுசு

வேற்றுமையின்றி பழகும் குணம் கொண்ட தனுசு ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு மறைவு ஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானங்களை பார்ப்பது உங்களின் வாழ்வில் சில தடைகளை நீக்கிக்கொள்ள வாய்ப்பாகவும், சிலருக்கு பல ஆண்டு முயற்சியின் பின்னர் வெளிநாடு செல்லும் சூழ்நிலைகளும் அமையும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் மறையும்.

கணவன் – மனைவி வேற்றுமைகளில் நல்ல சூழ்நிலை அமையும். எதிர்கால நன்மைகளுக்காக பல தடைகளை சந்தித்து புதிய தொழில் ஒன்றை தேடிவந்த நீங்கள், நல்ல வேலை கிடைக்கப் பெறுவீர்கள். அரசியலில் சிலருக்கு நல்ல ஆலோசகராக இருந்து வழிநடத்தும் வாய்ப்புகள் அமையும்.

முக்கியமான தொழில்நுட்பத்துறையில் பயிற்சி பெற்று, அதன் மூலம் முன்னேற்றம் காண சந்தர்ப்பம் அமையும். உறுதியுடன் எந்த செயலையும் செய்து வருவீர்கள். உயர்ந்த அந்தஸ்தில் உள்ள பெரிய தொழிலதிபர்களின் பழக்கம் உங்களுக்கு ஏற்ற சூழ்நிலையை பெற்றுத் தரும். காரியத்தில் நல்ல அனுகூலம் உண்டாகும்.

தடைப்பட்டு நின்றிருந்த காரியம் செயல்பட தொடங்கும். கலைத்துறையினர் ஆர்வம் காரணமாக பல இடங்களில் பலரை சந்தித்து மேன்மை பெறுவீர்கள். இதன் மூலம் நல்ல அனுபவமும் தன்னை எப்படி தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்துக்கொள்வீர்கள். மாணவர்களின் கல்வி மேன்மை உண்டாகும்.

தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். அடிக்கடி வெளியூர் சென்று வருவீர்கள். குடும்ப சுமைகள் குறைந்து தேவைகள் நிறைவேறும். ஆசிரியர் பணியில் சிலருக்கு இடைஞ்சல்கள் மறையும். இனி திறமையுடன் சுதந்திரமாக செயற்படும் சூழ்நிலை உண்டாகும். பொருளாதார நிலையில் சீரான அமைப்பு கிடைக்கும்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியருக்கு இலுப்பெண்ணெய் தீபமிட்டு சிவப்பு நிற பூ வைத்து, வழிபட்டு உங்களின் கோரிக்கையை சொல்லிவர அனைத்து காரியங்களும் சிக்கீரம் நடக்கும்.

மகரம்

உறுதியுடன் எதையும் செயற்படுத்திக் காட்டும் மகர ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தொடக்கத்திலேயே குரு பார்வை வரவிருப்பதால் குரு பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் அனைத்து காரியங்களும் செயற்பட தொடங்கும். சுகஸ்தானத்தில் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் உங்களின் செல்வாக்கு உயரும். அரசியலில் ஏற்றம் பெறுவீர்கள்.

உங்களின் வெளிநாடு பயணம் விரைவில் உறுதி செய்யபடும். கலைத்துறையினருக்கு முக்கிய ஒப்பந்தங்கள் மூலம் வருவாய் ஈட்டுவீர்கள். பொது வாழ்வில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்த முறையில் ஏற்பாடுகள் செய்து பாராட் டு பெறுவீர்கள்.

கனவுகளை செயல்படுத்த தேவையான உதவிகள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். செவ்வாய், சனி சேர்க்கை போட்டி, பொறாமைகள், வெறுப்பு போன்ற சில தொல்லைகள் இருந்தாலும், விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் யோகாதிபதி மூன்றாம் வீட்டில் உச்சம் பெறுவதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நன்மையைத் தரும்.

பெண்களுக்கு கூட்டுத் தொழிலும், தையல் சம்பந்தமான கார்மெண்ட் தொழிலும் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஆடைகள் விற்பனை மூலம் நல்ல இலாபமும் பெறுவீர்கள். சகோதரர்களின் மூலம் சிலருக்கு சங்கடங்கள் வந்து மறையும்.

எதற்கும் தனிமையாக செய்வதை விரும்பும் நீங்கள் பிறரின் ஆலோசனைகளை கேட்டு, அதன் முக்கியத்துவத்துக்கு தகுந்தபடி நீங்களே முடிவு செய்வீர்கள். விளையாட்டுத்துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சச்சரவு படிப்படியாக குறைந்து மகிழ்ச்சி நிறையும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ராகு காலத்தில் வைரவருக்கு நீல நிற பூ மாலை சார்த்தி, மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள அனைத்து காரியங்களும் வெற்றியைத் தரும்.

கும்பம்

திடமான நம்பிக்கையுடன் காரியத்தில் ஈடுபடும் கும்ப ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஜென்ம சனியாக அமர்வது உங்களுக்கு தன்னம்பிக்கையும், சில காரியங்களை செயற்படுத்துவதில் துணிச்சலும் உண்டாகும். எதையும் வரும் என்று காத்திருக்காமல் உடனே செயல்படுத்த தொடங்குவீர்கள். மகிழ்ச்சியான ஆண்டாக இருந்தாலும், கூட்டுத் தொழிலில் சிலர் கவனமாக இருப்பது நல்லது.

வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு நல்ல சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பல சிக்கல், சிரமங்கள் இனி முடிவுக்கு வரும். காரணமின்றி சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். பொது வாழ்வில் உங்களின் நல்ல செயல்கள் வெற்றியை தரும்.

யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் உடனுக்கு உடன் செயற்பட தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மேன்மையான சூழ்நிலைகள் உருவாகும். இதுவரை எதிரி போல பார்த்தவர் கூட நண்பராவார். கலைத்துறையினருக்கு சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கும். சில நேரம் பொறுமையுடன் காரியத்தை செயற்படுத்தி வளம் பெறுவீர்கள்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி, தேர்ச்சி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் மூலம் சிலருக்கு சில விடயத்தில் சங்கடங்கள் உண்டாகும். உங்களை ஏமாற்றி முன்பு பணம் பறித்து வந்தவருக்கு, மோசமான பாதிப்பு ஏற்படும். அத்தோடு, நீங்கள் கடமையை சரியாக செய்து வளம் பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும்.

அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியில் புதிய விடயம் உங்களுக்கு நல்ல அனுபவமாக அமையும். கோபுர கலசம் போல மற்றவர்களிடம் தனித்துவமாக மின்னுவீர்கள். எதையும் சொல்லாமலே செய்து பயன் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சனிக்கும் நவகிரக செவ்வாய்க்கும் வேப்பெண்ணெய் தீபமிட்டு சிவப்பு வண்ண பூ வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் அனுகூலமாக அமையும்.

மீனம்

பொறுமையுடன் எதையும் நிதானமாக செய்யும் மீன ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பெயர்ச்சிக்கு பின்பு நல்ல மாற்றம் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்து வருபவருக்கும் வெளிநாட்டு தொழில் செய்ய விரும்புபவர்களுக்கும் அதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். கடந்த காலத்தில் இருந்து வந்த பல தடைகள் நீங்கி, வருமானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

விரைய சனி காலம் என்பதால் எந்த வரவு செலவாக இருந்தாலும் இனி நேரடியாக உங்களின் பெயரில் செய்யாமல் வேறு நம்பிக்கையானவர்களின் பெயரில் செய்யவும். மனித நேயத்துடன் நடந்துகொண்டு பிறருக்கு உதவி செய்யும் உங்களின் பண்புகளால் பல தடைகள் உங்களை விட்டு விலகும்.

தோல்வி எதுவாக இருந்தாலும் அதனை படிப்பினையாக கொண்டு செயற்படுவது உங்களுக்கு மேன்மையைத் தரும். வெற்றி என்பது தானாக வராது என்றாலும் உங்களின் மன உறுதி உங்களை வளம் பெறச் செய்யும். முக்கியமான சில பிரமுகர்களின் சந்திப்பு உங்களுக்கு எதிர்காலத்தில் நற்பலன்களை பெற்று தரும்.

பொது நல விடயங்களில் ஈடுபாட்டினை குறைத்துக்கொண்டாலும், அது சார்ந்த சில செயற்பாடுகளை நீங்கள் முன்னின்று நடத்த வேண்டிவரும். குறிப்பாக, கோவில் காரியங்களில் உங்களின் பங்களிப்பு நற்பயனுள்ளதாக அமையும். கலைத்துறையினருக்கு நல்ல வரவேற்பு இருக்கும். இசைக்கலைஞர்களின் எதிர்பார்ப்பு சிறப்பாக அமையும்.

முக்கியமான சில காரியங்களில் கவனமாக செயற்பட்டு நன்மை அடைவீர்கள். சுப விரையமாக காலி மனை வாங்குவது, வீடு புதிதாக கட்டுவது. உங்களின் தேவையற்ற விரையத்தை குறைக்க பயன்படும். எத்தனை இடர் வந்தபோதும் சிறிதும் கலங்காமல் எதையும் செயற்படுத்துவதில் நீங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் வைரவருக்கு ராகு காலத்தில் ஐந்து நல்லெண்ணெய் தீபமிட்டு நீல நிற பூ வைத்து வேண்டிக்கொள்ள விரும்பியபடி சகல காரியங்களிலும் நன்மை உண்டாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்