சமூக, அரசியல், பொருளாதார செயற்பாடுகள் இதயசுத்தியுடன் முன்னெடுக்கப்படுவதில்லை
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
சமூக வாழ்க்கைக்கும் நிலையான சமாதானத்திற்குமான சமூக, அரசியல், பொருளாதார செயற்பாடுகள் இதயசுத்தியுடன் முன்னெடுக்கப்படாமல் இனத்துவம் சார்ந்த மறைமுகமான நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இன, மத மேலாதிக்கப்போக்கை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளிலேயே ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர் என கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் கலாநிதி என். புஸ்பராஜா தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வில் கலந்து கொண்ட பௌத்த, ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, மற்றும் கத்தோலிக்கரல்லாத சமயங்களைச் சேர்ந்த மாவட்ட சர்வமதக் குழுச்செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், இளைஞர் யுவதிகள் மத்தியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் பன்மைத்துவ உள்வாங்கல் மூலம் சமூக நியாயத்தையும் இன நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தல் எனும் தெளிவூட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலர் முனிப் றஹ்மான், மாவட்ட சர்வமதப் பேரவைக்கான உதவி இணைப்பாளர் எம்.ஐ. அப்துல் ஹமீட், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து தெளிவூட்டலைச் செய்த வளவாளர் கலாநிதி புஸ்பராஜா,
இலங்கையில் காணப்படும் அடையாள மோதலானது அரசியல் கட்சிகளின் அதிகார அரசியல் போட்டிகளின் காரணமாக தீவிரமடைந்தே வந்துள்ளது.
அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் மக்களிடையே உள்ள அடையாள அடிப்படையிலான வேறுபாடுகளை தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். சந்தர்ப்பங்களில் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த பெரும்பான்மையினக் குழுக்கள் இனங்களுக்கிடையே மத மற்றும் இன மோதல்களை ஏற்படுத்தி வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர் கதையாக நிகழ்ந்து வந்துள்ளது.
எனவே, இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்பதோடு இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கப்படவேண்டும்.
அனைத்து இலங்கையர் மத்தியிலும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தேசிய உணர்வு காணப்படாமை பன்மைத்துவ கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளாமை உள்வாங்குத்தலுக்குப் பதிலாக சட்டம், கொள்கை, நடைமுறை என்பனவற்றில் புறந்தள்ளும் பாரபட்சம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
மேலும், மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமை தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுதல் குறைந்தளவிலான அர்ப்;பணிப்பு பலமான தேசிய தலைமைத்துவம் இன்மை ஆகியனவும் இன விரிசல்கள் ஏற்படுவதற்கு தோதாய் அமைந்து விட்டிருந்தன.
இன்னும், இனவாத அரசியல், கடந்த காலம் பற்றி பக்கச் சார்பான வியாக்கியானங்கள், பிரித்தானியாரின் பிரித்தாளும் தந்திரங்கள், காலனித்துவ கொள்கைகள், காலனித்துவத்துக்குப் பிற்பட்ட இலங்கையில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் கொள்கைகள் போன்ற பல காரணிகள் இலங்கையில் உள்வாங்கலான சமூக கட்டமைப்பின் வெற்றிக்கு சவாலாக அமைந்திருந்தன.
சமூக நல்லிணக்கத்தையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் நிலையான அபிவிருத்தியையும் வளர்ப்பதற்கு பன்மைத்துவ சமூகத்தில் உள்வாங்கலானது அவசியமானதாகும்.
பன்மைத்துவ சமூகங்களின் வெற்றியை உறுதிசெய்வதில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று, சகல தனிநபர்களும் தங்கள் இனப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் மதிப்பு, மரியாதை மற்றும் வலுவூட்டப் பெற்றவர்களாக உணரும் சூழல்களை உருவாக்க வேண்டும்.” என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்