கொத்துரொட்டி கடைக்கு சீல் வைத்த பொது சுகாதார பரிசோதகர்கள்

-யாழ் நிருபர்-

 

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கடந்த புதன்கிழமை மாலை ஒருவரால் வாங்கப்பட்ட கொத்து ரொட்டியில் உள்ள இறைச்சி பழுதடைந்தமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்  ஆறுமுகதாசனிற்கு முறைப்பாடு கிடைத்தது.

இதனையடுத்து மாநகர சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பாலமுரளி தலைமையில் யாழ். மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள்  கடந்த  வியாழக்கிழமை குறித்த கடையில் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, மிகவும் பழுதடைந்த குளிர்சாதன பெட்டியில் சுகாதார சீர்கேடான முறையில் சமைத்த சமைக்காத கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி என சுமார் 45 கிலோ இறைச்சி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதுடன் மேலும் பல குறைபாடுகள் இனங்காணப்பட்டது.

இதனையடுத்து,   வெள்ளிக்கிழமை பொது சுகாதார பரிசோதகர்  ஆறுமுகதாசனால் மேலதிக நீதவான் நீதிமன்றில் ‘B’ பத்திரத்தினூடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை விசாரித்த நீதவான் கடையினை மறு அறிவித்தல் வரை மூடி சீல்வைக்குமாறும், கைப்பற்றப்பட்ட 45kg  இறைச்சியினை அழிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகரிற்கு உத்தரவிட்டதுடன் வழக்கினை யூன் மாதம் 28ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதனையடுத்து குறித்த கடை சீல் வைக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட 45kg இறைச்சியும் பொது சுகாதார பரிசோதகரால் அழிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்