குழந்தை பிறந்து 6 நாட்களான மனைவி: கணவனின் கொடூர செயல்!
ஊர்காவற்றுறை பகுதியில் கணவர் குழந்தை பிரசவித்து ஆறு நாட்களேயான தன் மனைவியை அடித்து சித்திரவதை செய்தமையினால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு களுத்துறை பகுதியில் பொலிஸ் நியமனம் கிடைத்துள்ளது.அங்கு சிங்கள யுவதியொருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் ஊர்காவற்றுறை திரும்பி குடும்பம் நடத்தியுள்ளனர். அத்தோடு பொலிஸ் சேவையையும் கைவிட்டு கூலி வேலைக்கு இளைஞன் சென்றுள்ளார்.
மனைவிக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது குழந்தை பிறந்து 6வது நாள். அன்று இரவு நிகழ்வொன்றிற்கு செல்வதற்காக தயாராகியுள்ளார். இதற்கு மனைவி தனக்கு இங்கு உறவினர்கள் இல்லையென்றும் குழந்தை பிரசவித்த 6வது நாளில் தன்னை தனித்து விட்டு செல்ல வேண்டாமென்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் மனைவியை தாக்கியுள்ளார். பின்னர் தரதரவென வீட்டுக்கு வெளியில் இழுத்துச் சென்று நடுவீதியில் வைத்து தும்புத்தடியினால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதனால் அந்தப் பெண்ணுக்கு குருதிப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் அவரை வீதியிலேயே விட்டுவிட்டு கணவன் நிகழ்வுக்கு சென்றுள்ளார். இதையடுத்து அயலவர்கள் தலையிட்டு அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டுக்கு அமைய அன்று இரவே கணவன் கைது செய்யப்பட்டு நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்