காதர் மஸ்தான் தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்க முயல்கிறார்

 

-மன்னார் நிருபர்-

முறையான அனுமதிப் பத்திரங்கள் பெற்று பல வருடங்களாக மணல் அகழ்வில் கனரக வாகனம் உழவு இயந்திரம் மற்றும் மணல் ஏற்றும் கூலித் தொழிலாளர்கள் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை நானாட்டான் பிரதேச செயலகத்தின் முன்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் பக்கச்சார்பாக செயல்படுவதாக கூறி குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் வாகனங்களையும் நானாட்டான் பிரதேச செயலகத்தின் முன் நிறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் முருங்கன் விகாராதிபதி கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முழு ஆதரவினையும் வழங்கியிருந்தார்.

இதன் போது வாகன உரிமையாளர்களும் கூலித் தொழிலாளர்களும் தெரிவிக்கையில்,

நானாட்டான் பிரதேசத்தில் அருவியாறு பரிகாரி கண்டல் பகுதியில் பல வருடங்களாக பிரதேச செயலகம் மற்றும் உரிய திணைக்களங்களின் அனுமதி பெற்று மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகிறோம்.

இதன் மூலம் கனரக வாகனங்கள்,  உழவு இயந்திர உரிமையாளர்கள், மணல் ஏற்றும் கூலித் தொழிலாளர்கள் என்று 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் பெற்று வருகிறார்கள்.

மேலும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு விவசாய காணிகள் உட்பட வேறு தொழில்கள் செய்வதற்கு வளங்களும் இல்லை அத்துடன் அனைத்து வாகனங்களும் லீசிங் மூலம் கட்டுப் பணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

இவ்வாறு இருக்கும்போது நானாட்டான் பிரதேசத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு மணல் அனுமதியானது மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தானால் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒரே அருவியாறு நிர்வாக ரீதியாக நானாட்டான்இமுசலி பிரதேசம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. முசலி பிரதேசத்திற்கு மாத்திரம் மணல் அகழும் அனுமதி வழங்கி நானாட்டான் பிரதேச தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று கூலித் தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களின் இந்த செயற்பாடுகள் மூலம் சகோதரர்களாக வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்க முனைப்பு காட்டுகிறாரா? என்னும் சந்தேகம் எழுந்துள்ளது என்றும் தெரிவித்தார்கள்.

முன்பும் மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்திக் குழு தலைவர்கள் செயற்பட்டார்கள் அவர்கள் இவ்வாறு இன, மத முரண்பாடுகளை அவர்கள் தோற்றுவிக்கவில்லை பக்கச் சார்பாகவும் நடக்க வில்லை.

எனவே இந்த மணல் ஏற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நானாட்டான் பிரதேசத்தில் முன்பு வழங்கப்பட்ட மணல் அகழும் அனுமதி மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்