ஐஎஸ்ஓ தரத்துடன் கூடிய விவசாய தொழில்நுட்ப ஆய்வு கூடம் : ஒப்பந்தம் கைச்சாத்து
-மூதூர் நிருபர்-
கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகமும் கிழக்கு மாகாண சபையும் இணைந்து மாகாண ஆளுநர் அனுராதா யஹ பத் தலைமையில் நாட்டிலேயே முதன்முறையாக ஐஎஸ்ஓ(ISO) தரத்துடன் கூடிய விவசாய தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திட்டனர்.
ஆளுனரால் செயல்படுத்தப்பட்ட” நிலையான விவசாயம் “என்ற திட்டத்துடன் இணைந்து இந்த புதிய ஆய்வகம் கட்டப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க மற்றும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ஜே.கே.ஆர்.ராதிகா சமரசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த புதிய ஆய்வகத்தின் மூலம் இயற்கை உரங்கள், விதைகள் , விவசாய உணவு மற்றும் மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அந்த சான்றிதழ்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதிப்பு வழங்கப்படுவதும் விசேட அம்சமாகும்.
தற்போது, நாட்டில் மஹஇலுப்பல்லம மற்றும் கன்னோறுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களில் 2 ஆய்வகங்கள் உள்ளன மற்றும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் தலையீட்டுடன், அனைத்து வசதிகளுடன் முழுமையான ஐஎஸ்ஓ தரநிலைகளுடன் அத்தகைய ஆய்வு கூடம் இல்லை.
உத்தேச புதிய ஆய்வுகூடத்தை நிர்மாணிப்பதன் மூலம் விவசாய பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படும் வட மத்திய மற்றும் வடமாகாண விவசாயிகளும் அதிக தூரம் பயணிக்காமல் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
இன்று நாட்டில் டொலர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால், விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு அனுப்பி, இதிலிருந்து பெறப்பட்ட பெறுமதியான தரச் சான்றிதழ் மூலம் நாட்டுக்கு டொலர்களை கொண்டு வர முடியும் என ஆளுநர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில், புதிய ஆய்வகத்திற்காக சீனாவின் யுன்ஹான் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க நாங்கள் பணியாற்றவுள்ளோம். எத்தகைய மாற்றங்கள் வந்தாலும் இதனை முன்னெடுத்துச் செல்வதற்கு முதுகெலும்பும் ஆர்வமும் இருக்க வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
இதன்போது, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, திருகோணமலை மாவட்ட செயலாளர் பி.எச்.என்.ஜெயவிக்ரம, திருகோணமலை மாவட்ட விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.