எலிக்காய்ச்சல் குறித்து யாழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ் மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நேற்றுவரை ஏறத்தாழ 6000 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நாளை புதன் கிழமை வருகை தரவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்