இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்ற ஒருவருக்கு பிரதிநிதித்துவம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சில்வா பெயரிடப்பட்டுள்ளார்.

இலங்கை விழிப்புலனற்றோர் பட்டதாரிகளின் சம்மேளனத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா, தேசிய மக்கள் சக்தியின் 18 உறுப்பினர்களைக் கொண்ட தேசியப் பட்டியல் மூலம் உத்தியோகப்பூர்வமாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

1967ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி பலப்பிட்டியவில் பிறந்த சுகத் வசந்த டி சில்வா, சிறுவயதில் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தினால் முற்றாகப் பார்வையிழந்தார்.

1994ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விசேட இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர், தற்போது விழிப்புலனற்றோர் பட்டதாரிகளின் சம்மேளனத்தின் தலைவராகச் செயற்படுகின்றார்.

இலங்கையில் விசேட தேவையுடையோரின் உரிமைகளுக்காகத் தளராத உறுதியுடன் குரல் கொடுத்த சுகத் வசந்த டி சில்வா, இலங்கை வரலாற்றில் முதலாவது விழிப்புலனற்றோர் சார்பில் இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்தை இன்று திங்கட்கிழமை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

அண்மைய கணக்கெடுப்பில் இலங்கையில் 1.7 மில்லியன் விழிப்புலனற்றோர் வசிப்பதாக கணக்கிடப்பட்ட நிலையில் அவர்கள் சார்ந்த ஓர் பிரதிநிதி நாடாளுமன்றம் செல்வது விசேட அம்சமாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்