ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
அரச சேவை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான அலகொன்றை நிறுவுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது அரச சேவை தொடர்பில் நாளாந்தம் அதிகளவு முறைப்பாடுகள் பெயர் குறிப்பிட்டும், அநாமதேயமாகவும் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கிடைத்து வருகின்றன.
அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும், அரச சேவையில் எதிர்பார்க்கப்படும் சாதகமான மாற்றங்களை மேற்கொள்வதற்காகவும் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக, அமைச்சு மட்டத்தில் நாடு தழுவிய சேவையிலுள்ள முதலாம் தர அலுவலர் அல்லது புலனாய்வுச் செயன்முறை தொடர்பான அனுபவமுள்ள அரச சேவையின் முதலாம் தர நிறைவேற்று அதிகாரியின் தலைமையில் விசாரணை அலகொன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.