சட்டவிரோத வாகனங்களை விற்னை செய்யும் பாரிய வியாபாரம் பொலிஸாரால் முறியடிப்பு!

சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தை முறியத்து, மாத்தளை பகுதியில் சந்தேகநபர் ஒருவரை, நேற்று புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு, போலி இலக்கத் தகடுகள் மற்றும் செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி, மூன்று சொகுசு ஜீப் வண்டிகளை வைத்திருந்த நபர் ஒருவர், கடவத்தையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர், மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டது.
இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில், மாத்தளை பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபருக்கு இந்த வியாபாரத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த நபர்  தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 08 சொகுசு வாகனங்களுடன், நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் குறித்த எட்டு வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும், வாகனங்களுடன்  கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளில், குறித்த நபர் அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் வாகனங்களைச் சேகரித்து விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளமை  கண்டுபிடிக்கப்பட்டது.