உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களுக்கிடையில் மோதல்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பிரபல கட்சியில் லுணுகலை பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றுமொரு பிரபல கட்சியின் ஆதரவாளரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
லுணுகலை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் வசிக்கும் 63 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்கான 52 வயதுடைய நபர் லுணுகலை பிரதான வீதியில் வசிப்பவர் எனவும், குறித்த நபர் லுணுகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் தனக்கு சொந்தமான இடத்தில் இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேசிய மக்கள் சக்திக்கு தேர்தல் பிரச்சார காரியாலயம் அமைப்பதற்கு இடம் கொடுத்தமையே முறண்பாட்டிற்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பதுளை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில் லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.