ஆப்கானிஸ்தானை திணறடித்த கிளென் மெக்ஸ்வெல் : அரையிறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்று, கிளென் மெக்ஸ்வெலின் புதிய சாதனைகளுடன் அவுஸ்திரேலியா அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சத்ரான் (Ibrahim Zadran) ஆட்டமிழக்காது 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து 292 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 91 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை இழந்து தோல்வியடையும் நிலையில் இருந்தது.

இந்தநிலையில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மெக்ஸ்வெல், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

இதன்படி, 46.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று, நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் கிளென் மெக்ஸ்வெல், 10 ஆறு ஓட்டங்களும் 21 நான்கு ஓட்டங்களும் அடங்கலாக 128 பந்துகளில் 201 ஓட்டங்களைப் பெற்று புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

இதற்கமைய, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி ஒன்றில் ஆறாவது மற்றும் அதற்குக் கீழே களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அத்துடன் தொடக்க வீரர் அல்லாத ஒருவர் இரட்டை சதமெடுத்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அதேநேரம் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி ஒன்றில் அதிக ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் கிளென் மெக்ஸ்வெல் படைத்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்