சட்டவிரோத கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், இன்று சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்த சம்பவம், மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய சிறையில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த சுப்பையா சாந்தகுமார் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பொலிஸ் நிலைய பொலிஸாரால், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில், 1500 மில்லிலீற்றர் சட்டவிரோத கசிப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சம்பவ தினமான இன்று சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில், சந்தேகநபர் உடல் நலக்குறைவால் சிறைக்கூடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்காக நடவடிக்கைகளை, பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.