இணையவெளி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதலாவது கைது

 

சமூக ஊடகத்தில் அரசாங்கத்துக்கு அவதூறை ஏற்படுத்தும் வகையில் பதிவைச் செய்த ஒருவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் (சி.ஐ. டி.) கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ரிறான் அலஸ் தெரிவித்திருக்கிறார்.

பாணந்துறையில் சமூகப்பொலிஸ் குழுவுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் கைதுசெய்யப்பட்டவரிடம் நான்கு இலட்சம் ரூபா பணம் இருந்ததாகவும் கூறினார்.

அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் அரசாங்கத்தின் மீது சேறுபூசும் பிரசாரத்தை கைதானவர் செய்துவந்ததாக கூறிய அமைச்சர் அலஸ் மேலும் தெரிவித்ததாவது ;

இரகசியப் பொலிசாரினால் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் மீது சேறுபூசும் பிரசாரத்தை அவர் மேற்கொண்டார்.
தனக்கு அரசியல்வாதி ஒருவர் பணத்தைக் கொடுத்ததாகவும் அவர் கூறினார். அமெரிக்க டொலர்களை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு கொழும்பு கோட்டைக்கு செனாறுவிட்டு திரும்பும்போதே அவர் கைதுசெய்யப்பட்டார்.

எம்மை, அரசாங்கத்தை, பொலிஸ்மா அதிபரையும் வேறு ஆட்களையும் களங்கப்படுத்துவதற்கு அவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகிறார்கள். அத்தகைய செயல்களைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் இணையவெளி பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டுவந்தது. சமூக ஊடகங்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மாத்திரே இந்த சட்டம் பிரச்சினையாக இருக்கிறது.

பாதாள உலகக் கும்பல்களுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராக ‘யுக்திய ‘ நடவடிக்கை நாடுபூராவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. அது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யுக்திய நடவடிக்கையை நிறுத்துமாறு எனக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் வேறு அதிகாரிகளுக்கும் உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியாகவும் நெருக்குதல்கள் கொடுக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள சில குழுக்கள் எம்மைத் தாக்குவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றன. நான் அமைச்சராக இருக்கும் வரை இந்த குழுக்களிடம் இருந்தோ அல்லது சர்வதேச சமூகத்திடம் இருந்தோ வருகின்ற நெருக்குதல்களுக்கு அடிபணியப்போவதில்லை. யுக்திய நடவடிக்கை எமது நாட்டின் எதிர்காலச்சந்ததிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படுகிறது.