இன்று ஆரம்பமாகிறது உயர்தர பரீட்சை : தொடரும் மின்வெட்டு

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

அதன்படி, 2200 பரீட்சை நிலையங்களில் காலை 8.00 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகும்.

இந்த ஆண்டு பரீட்சையில் கட்டுரை கேள்விகளுக்கு கூடுதலாக 10 நிமிடங்கள் அவகாசம் வழங்க பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான பரீட்சை பெப்ரவரி 17ம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் நேற்று அறிவித்து, அனைத்து பரீட்சை நிலையங்களையும் சுற்றி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று முதல் பரீட்சை நிலையங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல பொது போக்குவரத்து சேவையில் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், பரீட்சை காலத்தில் மின்வெட்டு இருக்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்த போதிலும், மின்வெட்டு அட்டவணையின்படி 02 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.