பசறையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்-

பதுளை – பசறை அம்பத்தன்ன பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

13 ஆம் கட்டை வனாத்தவில்லுவ பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  அம்பத்தன்ன பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும் இருவருமே இதற்கு முன்னர் திருமணம் ஆனவர்கள் என்று பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பெண் நேற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

பெண்ணின் மாமனாருக்கும் அவரது மகனுக்கும் மரணித்த நபருடன் முறுகல் நிலை உண்டானதாகவும் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் பொலிஸாரிடம் குறித்த பெண் கூறியுள்ளார்.

இருப்பினும் சந்தேகம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத போதிலும் பசறை நீதிவான் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் சடலம் உடற்கூறு பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEO NEWS