சம்பள பிரச்சினையை மாத்திரம் கூறி மலையக மக்களை முடக்கி வைக்க முடியாது

சம்பள பிரச்சினையை மாத்திரம் கூறி மலையக மக்களை முடக்கி வைக்க முடியாது, என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை கண்டி ‘கரலிய’ அரங்கியல் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் பொதுக் கூட்டத்திலேயே இதனை தெரிவித்தார்.

”எனக்கு கெபினட் அமைச்சு பதவி வழங்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த காலப்பகுதியில் என்னால் முடிந்த வரையில் சேவைகளை செய்திருக்கிறேன். கண்டி மாவட்டத்திற்காக மாத்திரம் 160 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கண்டி மாவட்டத்திற்கு இந்தளவு நிதி ஒதுக்கப்பட்டதில்லை.

அதேபோல் கண்டியிலும் பதுளையிலும் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்கவுள்ளோம். அதற்காக இந்திய அரசாங்கத்தின் உதவியைக் கோரியுள்ளோம். 10 இலட்சம் தோட்ட மக்கள் உள்ளனர். அவர்களில் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் பேர் மட்டுமே தோட்ட தொழில் செய்கின்றனர்.

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பள அதிகரிப்பு வழங்குவதை விரும்பவில்லை. சம்பள பிரச்சினையை மாத்திரம் கூறி மலையக மக்களை முடக்கி வைக்க முடியாது. சம்பள விடயத்திற்கு மேலாக ஜனாதிபதி மலையகத்தின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்களை செயற்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், சம்பள அதிகரிப்புக்குத் தேவையான சகல முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது சம்பள அதிகரிப்புக்கு இணங்கியுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது, என மேலும் தெரிவித்தார்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்