பாசிக்குடா, அறுகம்பை கடற் கரைகள் நீலக்கொடி கடற்கரைத் திட்டத்தில் தெரிவு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

பாசிக்குடா “புளு பிளக் பீச்” நீலக் கொடி கடற்கரை வேலைத் திட்டம் தொடர்பான முகாமைத்துவ கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேக்கா தலைமையில் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் துறைசார்ந்த அரச அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பாசிக்குடாக் கடற்கரையை “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” ஆகத் தரமுயர்த்தும் வேலைத் திட்டம் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சின் அனுசரணையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டத்திற்காக கிழக்கு மாகாணத்தில் அறுகம்பை கடற்கரையும் பாசிக்குடா கடற்கரையும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலில் கடல் சூழல்சார் பாதுகாப்பு அதிகாரசபை (Marine Environment Protection Authority) யின் மாவட்ட அதிகாரி ஆசிபா அப்துல் றசூல் பாசிக்குடாக் கடற்கரையை இவ்வாறு “புளு பிளக் பீச் (Blue Flag Beach)” ஆக தரமுயர்த்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தினார்.

“புளு பிளேக் பீச் (Blue Flag Beach))” தரச் சான்றிதழ் டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள சுற்றாடல் கல்விக்கான மன்றம் (FEE) எனும் சர்வதேச நிறுவனத்தினால் சுற்றாடல் கல்வி மற்றும் தகவல், தரமான நீர், சுற்றாடல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் சேவை ஆகிய பிரதான நான்கு காரணிகளுடன் காணப்படும் கடற்கரைகளுக்கு வழங்கப்படுகின்றது.

இதற்காக 33 அளவுகோல்கள் உள்ளன. இதில் 23 அளவுகோல்கள் இதுவரையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் தகவல் நிலையம் அமைத்தல், கடற்கரைப் பயனாளிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல், கடற்கரை நீரின் தரம் தொடர்பாக டிஜிடல் அறிவித்தல் பலகை அமைத்தல், மலசல கூடம் அமைத்தல், உடைமாற்றும் பகுதியை புனர் நிர்மாணம் செய்தல், உடைமைகளை பாதுகாக்க பாதுகாப்புப் பெட்டகம் அமைத்தல், கழிவகற்றல் சேவைகளை பராமரித்தலும் தரமானதாகப் பேணுதலும் மற்றும் மீள்சுழற்சிக் கழிவுகளை சேகரித்தலும் அதனை ஒப்படைத்தலும், போன்ற செயற்பாடுகளை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, கல்குடா பிரதேச சபை ஆகியவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கடல் சூழல்சார்; பாதுகாப்பு அதிகாரசபையின் கிழக்கு பிராந்திய உதவி முகாமையாளர் ரீ. சிறிபதி, சுற்றுலாத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைமைக் காரியாலய அதிகாரிகள், மாவட்டச் செயலக பிரதேச செயலக திணைக்களங்களின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.