18 வயது மாணவி பேருந்தின் முன்னால் நின்று கூச்சல் : சாரதி கைது

-பதுளை நிருபர்-

 

வெள்ளவாய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி மதுபோதையில் பேருந்தை செலுத்திய போது ஹிங்குறுகடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவாய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில் வெள்ளவாயவில் இருந்து சியம்பலா குண வீதியின் ஊடாக ஹிங்குறுகடுவ நோக்கி வந்து கொண்டிருந்த போது பேருந்து அதி வேகமாக வந்து கொண்டிருந்ததாகவும் சுமார் இரண்டு இடங்களில் விபத்து ஏற்பட இருந்ததாகவும் அமுனாண்ட ஆர பகுதியில் கல்லொன்றில் பின் டயர் மோதியதில் டயர் ஒன்று வெடித்ததாகவும் இதன் போது பேருந்தினுள் பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த 7 வயது சிறுவன் ஒருவரும் 14 வயதுடைய பெண் பிள்ளை ஒன்றும் காயமடைந்து ஹிங்குறுகடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிங்குறுகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பேருந்தினுள் இருந்த 18 வயதுடைய மாணவி ஒருவர் சாரதியிடம் சென்று பேருந்தை மீண்டும் செலுத்த வேண்டாம் என்றும் நீங்கள் மது போதையில் இருக்கின்றீர்கள் என்று கூக்குரல் இட்டு சத்தம் போட்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி பேருந்துக்கு முன் நின்று தான் பேருந்தை செலுத்த விட மாட்டேன் என்றும் கூக்குரல் இட்ட போது அவ்விடத்தில் பொது மக்களும் ஒன்று கூடினர்.

குறித்த மாணவி ஹிங்குறுகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கையடக்க தொலைபேசியின் மூலம் அறிவித்துள்ளார்.

இதன்போது ஸ்தானத்திற்கு விரைந்த ஹிங்குறுகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டார சாரதியை கைது செய்து பரிசோதனைக்கு உட்படுத்திய போது சாரதி மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதன்போது 44 வயதுடைய கரம்பிடிய ஹிங்குறுகடுவ பகுதியை சேர்ந்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்  பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக ஹிங்குறுகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டார தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்