
ஒரு நாடு என்ற வகையில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் கட்டியெழுப்பி ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர இலங்கையினால் மாத்திரமே முடிந்ததென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனவே, நாடு என்ற வகையில் நாம் பெற்ற வெற்றியை பாதுகாத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ‘தியவர திரிய’ என்ற பெயரில் நடைபெற்ற தேசிய மீனவர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில், நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான மீனவ சங்கங்கள் மற்றும் கிளைச் சங்கங்களின் தலைவர்கள் உட்பட பெருந்தொகையான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் தேசிய மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கடற்றொழில் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
மீனவ கிராமங்களுக்கு நிரந்தர காணி வழங்குதல், மீனவ மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்தல், மீனவ சமூகத்தின் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்குதல் போன்ற நலன்புரி திட்டங்கள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“நாட்டின் பிரச்சினைகளை பேசிக்கொண்டிருப்பதை விடுத்து இந்த நாட்டின் மீதும் எதிர்காலத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஒரு நாடாக நாம் எரிபொருள், மருந்து மற்றும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டோம். இரண்டு வருடங்களின் பின்னர் இன்று நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது. ஆனால் எமக்கு இன்னும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன.
இரண்டு வருடங்கள் நெருக்கடியான காலக்கட்டத்தில் சுமைகளை சுமந்த அனைவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். நாம் வீழ்ந்தால் நாடு அழிந்துவிடும். ஆனால் நாம் முன்னேற முடியும் என்று நான் நம்பினேன். இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த முடியும்.
ஒவ்வொரு தொழில் துறைக்குள்ளும் வெவ்வேறு பிரச்சனைகள் உள்ளன. அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் அதேநேரம், உள்நாட்டு கடன்களை குறைத்துக்கொண்டதால் வங்குரோத்து நிலையில் இருந்து மீள முடிந்தது. கடன் வாங்குவதைக் மட்டுப்படுத்தும் அதேநரம் வருமானத்தை அதிகரித்துகொள்ள வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகளில் ஒன்றாகும். அதற்கான கடினமான சில முடிவுகளை நாம் எடுக்க வேண்டியிருந்தது.
VAT வரியை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சிறிது காலம் மக்களுக்கு சுமையாக இருக்கும் என்பதால், தற்போது அந்தப் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காண்கிறோம்.
அதன்படி நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். கடன் சுமையிலிருந்து விடுபட வேண்டுமாயின் இன்னும் 04-05 வருடங்கள் இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் எட்டிய உடன்பாடுகளை மற்றைய நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. அந்த நிபந்தனைகளை மீறினால், எமக்கு எந்த உதவியும் கிடைக்காது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை 16 முறை மீறியதால் எம் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இம்முறை நாம் செய்து கொண்ட ஒப்பந்தம் வலுவானது. அதன்படி அடுத்த 04 – 05 வருடங்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நிபந்தனைகளை உடைத்து கிடைக்கும் சலுகைகளை இழந்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய அடையச் செய்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
பொருளாதார ரீதியில் மீண்டும் நாம் வீழ்ச்சியடைந்தால், இன்று இங்குள்ள மீனவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் எதனையும் வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது. அதற்குத் தேவையான பணத்தை ஈட்டிக்கொள்ள நல்ல வருமானம் தேவைப்படும். எரிபொருளுக்கு நிவாரணம் வழங்குமாறு மீனவச் சமூகம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. நலன்புரிதல்களுக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். மீனவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும். மேலும், மீனவர்களின் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்காக புதிய நலத்திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். எரிபொருளுக்கு வழங்கப்படக்கூடிய சலுகைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
மேலும், மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த வேண்டும். அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்துடன், மீன்பிடித்துறையை நவீனமயமாக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைப் போன்று மீன்பிடித் தொழிலை நம் நாட்டிலும் வலுவூட்ட வேண்டும். அதற்காக இடைக்கால மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.
மலேசியா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் மீன்பிடித் தொழிலை சிறப்பாக நடத்த முடியுமென்றால், அதை நம்மால் செய்ய முடியாதா என்று சிந்திக்க வேண்டும். நாம் புதிதாக சிந்தித்து புதிய வேலைத்திட்டங்களுடன் முன்னேறிச் செல்ல வேண்டும்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
