மட்டு மாவட்டத்தில் இராணுவ , பொலிஸ் அனுசரணையுடதான் இரவில் மண் அகழ்வு நடைபெறுகிறது – பா.உ. ஜனா

சுற்றாடல் அமைச்சர் எமது மாவட்டத்தில் இருக்கும் மண்மாபியாக்களைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார், சட்டத்திற்கு முரணாக மண் ஏற்றுபவர்களைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார் ஆனால் இங்கு இராணுவம் , பொலிஸ் என்பவற்றின் அனுசரணையுடன் தற்போதும் இரவிலே மண் அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளங்கள் பாதுகாப்பு, சுற்றலாத்துறை மற்றும் காணி அமைச்சுகளின் விடய தானம் சம்மந்தமான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை பகிரங்கமாக இதனை தெரிவித்தார்.

நாட்டில் அதிகமான வளத்தை உருவாக்குவதும், கூடுதலான பிரச்சனைகளைக் கொண்டதுமான அமைச்சுகளின் மீதான விவாதம் இன்று நடைபெறுகின்றது.

அத்துடன் இங்கிருக்கும் சுற்றாடல் அமைச்சர் எமது மாவட்டத்தில் இருக்கும் மண்மாபியாக்களைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார். சட்டத்திற்கு முரணாக மண் ஏற்றுபவர்களைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார். ஆனால் இங்கு இராணுவ பொலிஸ் என்பவற்றின் அனுசரணையுடன் தற்போதும் இரவில் மண் அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தாண்டியடி விசேட அதிரடிப்படையினர் மிகவும் நிதானமாகச் செயற்பட்டு சட்டவிரோத மண் அகழ்வினைத் தடுக்கின்றார்கள். குறிப்பாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டியடிவெளி, வாகனேரி, சந்தியாறு போன்ற பிரதேசங்களிலே 8500 ஏக்கர் நெற் காணிகளுக்கு அதனூடாக ஊடறுத்துச் செல்லும் ஆற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை இருக்கின்றது.

ஏனெனில் அந்த ஆற்றிலே மண் அகழ்வதால் வயல் மட்டத்தில் இருந்து ஆறு மிகவும் ஆழத்தில் இருக்கின்றது. எனவே எருக்கலம் காட்டுப் பாலத்திற்கு அருகில் விசேட அதிரப்படை சிறு முகாமை அமைததால் அந்தப் பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் அகழ்பவர்களைக் கைது செய்யலாம் என இன்று   ஜனா நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.