மட்டக்களப்பு – பதுளை வீதியில் அமைந்துள்ள இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில், 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், மாணவர்களுக்குப் புத்தகப்பைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எஸ். கிரிசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களும் , கற்பித்த ஆசிரியர்களும் பெற்றோர்களால் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சுதாகரன் கிருத்திகேசன் 135 புள்ளிகளையும், ஜெயசீலன் ஜெயலக்சிகா 132 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மேலும் ஏனைய 14 மாணவர்களும் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களை மாத்திரமன்றி பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களினதும் உளநலத்தையும் மன ஊக்கத்தையும் கருத்திற்கொண்டு அவர்களின் முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், அவர்களிடையே தன்னம்பிக்கையையும் கல்வி மீதான ஆர்வத்தையும் வளர்ப்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இந்நிகழ்வில் பாடசாலைப் பிரதி அதிபர் சி. சிவதனேஸ், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எஸ். சர்வானந்தன், சேவகம் நிறுவனத்தின் தலைவர் செ. நிலாந்தன், சமூகச் செயற்பாட்டாளர் பா. நாராயணசாமி, சேவகம் நிறுவனத்தின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி அபிவிருத்திக் குழுவின் நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் சிறிய வெற்றிகளையும் அங்கீகரித்துப் பாராட்டுவதன் மூலம் அவர்களிடையே தன்னம்பிக்கையையும் எதிர்காலத்தில் மேலும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்த நோக்கில் மேற்படி நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.












