
மகளுக்கு 10 நாட்களில் திருமணம்: மருமகனுடன் வீட்டைவிட்டு சென்ற மாமியார்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரின் மந்த்ராக் பகுதியில் மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த மருமகனுடன் மாமியார் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
மனோகர்பூர் கிராமத்தில் வசிக்கும் ஜிதேந்திரா மற்றும் அப்னா தேவி தம்பதியினரின் மகளான ஷிவானிக்கு உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் வேலை பார்த்து வந்த ராகுலை திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கப்பட்டது.
இவர்களுக்கு ஏப்ரல் மாதம் 16 அம் திகதி திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் திருமணத்திற்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு ஜிதேந்திராவின் மனைவி அப்னா தேவி என அழைக்கப்படும் அனிதா தனது வருங்கால மருமகன் ராகுலுடன் ஓடிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து 10 நாட்களுக்கு பின் தப்பிச் சென்ற மருமகனும், மாமியாரும் நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தனது மருமகனுடன் வீட்டை விட்டு வெளியேறியமைக்கான காரணத்தை குறித்த பெண் இவ்வாறு தெரிவித்தார் ” கணவர் ஜிதேந்திரா காலையிலிருந்து மாலை வரை மது அருந்துவார். ஆறு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பார். இதுவரை அந்த மனிதரால் வீடு கட்ட முடியவில்லை. தினமும் ரூ.1500 கேட்டு என்னை அடித்து துன்புறுத்துவார். என் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் மருமகனுடன் பேசியதை கணவர் சந்தேகப்பட்டார். எனது மகளோ என்னை கிண்டல் செய்தார்.
என்னையும் மருமகனையும் தொடர்புபடுத்தி என் மீது மோசமான குற்றச்சாட்டுகளைச் சொல்லி துன்புறுத்துவார். நான் எவ்வளவோ மறுத்தும் மீண்டும் மீண்டும் அதையே சொல்லி, ‘நீ உன் மருமகனுடன் ஓடிப்போ’ என்று கூறினார். மருமகனுடன் ஓடிப்போகச் சொல்லி தினமும் கூற ஆரம்பித்தார். அவரின் தொந்தரவை தாங்க முடியாமல் விரக்தியில் அவர் சொன்னதையே செய்தேன். இப்போது என் வாழ்க்கையில் யார் வந்தாலும், மருமகன் ராகுலுடனேயே இருப்பேன். எங்களைத் தனியாக விடுங்கள்.
வீட்டிலிருந்து வெளியேறும்போது எனது மொபைலையும் ரூ.200ஐயும் மட்டுமே எடுத்துச் சென்றேன். அதுபோக, என் காலில் கொலுசும், கழுத்தில் தாலியும் மட்டுமே இருந்தது. மற்றபடி எனது கணவர் கூறுவது போல் 3.5 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்துச் செல்லவில்லை. அது பொய். நாங்கள் இன்னும் திருமணம் செய்யவில்லை. ஆனால் நான் ராகுலுடன் செல்ல விரும்புகிறேன். அவருடன் வாழ விரும்புகிறேன். விவாகரத்து நடந்தாலும் இல்லாவிட்டாலும் நான் ராகுலுடன் மட்டுமே இருப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.