-பதுளை நிருபர்-
14 வயதும் 6 மாதங்களும் கொண்ட சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தார் எனும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
சப்புகஸ்மட, நிகேபெத்த, பெல்காத்தன்ன பகுதியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 திகதி குறித்த சிறுமி தனது வீட்டாருடன் முரண்பட்டு கொண்டு தனது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதுடன் அன்று இரவு வீடு திரும்பவில்லை என நவம்பர் மாதம் 27 ஆம் திகதி குறித்த சிறுமியின் பெற்றோரினால் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு அளித்து விட்டு வீடு சென்ற பெற்றோர் அங்கு தனது மகள் வீட்டுக்கு வந்திருப்பதை அவதானித்து உள்ளனர் . பின்னர் 28 ஆம் திகதி மீண்டும் பசறை பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளித்த பெற்றோர், தனது மகள் கவனமாக வீடு திரும்பியுள்ளதா கூறி முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக சிறுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகவும், அதனால் இம்மாதம் சிறுமியை பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதித்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது சிறுமியிடம் விசாரணைகளை மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவு பொலிஸார், குறித்த நபரினாலேயே தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுமி கூறியதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை பசறை நீதிவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.