பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு

– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

சர்வதேச சுற்று சூழல் கரிசனைக்கு அமைவாக தேசிய மர நடுகை தினத்தை அனுசரித்து பல்லுயிர்த்தன்மை பாதுகாப்பையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதத்தில் கதிரவெளியில் 30 ஆயிரம் பனம் விதைகள் நடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.

புனர்நிருமாணம் செய்யப்பட்டு சமீபத்தில் பிரதேச பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட திக்கனைக்குளம் அமைந்துள்ள கல்லரிப்புக் கிராமத்தின் சூழலில் இந்த பனம் விதைகள் நாட்டும் திட்டம் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை வாகரை பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஏ. சுதர்ஷன் தலைமையில் இடம்பெற்றது.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு அமைப்பு (வீ எபெக்ற்) கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை கூட்டிணைந்து இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து பிரதேச பொதுமக்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் விவசாயிகள் ஆகியோர் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் திலீப்குமார், பல்லுயிர்த் தன்மை பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, சமூக பொருளாதார பாதுகாப்பு ஆகிய விடயங்களின் முக்கியத்துவம் கருதி இயற்கையோடு இணைந்து வாழும் இந்த செயற்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இயற்கையைப் பாதுகாப்பதன் மூலம் நாம் இயற்கை வளங்களைக் கொண்டு ஆரோக்கியமான வாழ்வுடன் அபிவிருத்தி காண முடியும்” என்றார்.

இந்நிகழ்வில் வாகரைப் பிரதேச சுற்றுச் சுழல் அலுவலர் பானுப்பிரியா, பொருளாதார அபிவிருத்தி அலுவலர் சத்தியகாந்தி, கதிரவெளி திக்கானை சமூக பொருளாதார கூட்டுறவு அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் பணியாளர்கள், உட்பட பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.

“எங்களது செயற்பாடு எங்களது எதிர்காலம் – பெண்களையும் விவசாயிகளையும் வலுப்படுத்துவோம்.” எனும் தொனிப்பொருளில் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திக்கனைக்குளம், மாணிக்கம்குளம், பனிச்சங்கேணிக்குளம் ஆகிய மூன்று குளங்கள் சுமார் 18 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு அண்மையில் பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சமூக மட்ட பிரதேச மக்களின் முழுமையான பங்கேற்புடன் காட்டு யானைகளின் ஊடுருவலையும் மண்ணரிப்பையும் தடுக்க ஒரு இலட்சம் பனை மரங்களை வளர்க்கும் செயல் திட்டத்திற்கும் வீ எபெக்ற் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிதி அனுசரணை வழங்குகிறது.

“நிலைபேறான சமூக அபிவிருத்திக்கு சூழலைப் பொருளாதார மூலதனமாக்குவோம் அதற்காக பாடுபடுவோம்” எனும் தொனிப் பொருளின் கீழ் பனை விதை நாட்டும் அந்த விசேட செயற்திட்டம் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பால்சேனை அம்மன்குளத்தை அண்டிய நிலப்பரப்பில் கடந்மத வருடம் செப்ரெம்பெர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு

பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு

பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு

பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்