நானுஓயாவிலும் தபால் அலுவலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவாக நுவரெலியா மற்றும் நானுஓயாவிலும் தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர் .

எனினும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபால் சேவை மற்றும் அலுவலக கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலையும், பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது இதனால் தபால் நிலையங்களுக்கு சேவைகளை பெற வந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்