-பதுளை நிருபர்-
மஹியங்கனையில் நேற்று சனிக்கிழமை மாலை கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உக்வகாவ, குடாஓய, வெலென் பெல, மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பணம் கொடுத்து கஞ்சா கொள்வனவு செய்வதற்காக மாறு வேடத்தில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரிடம் 10 கிராம் காய்ந்த கஞ்சாவை கொள்வனவு செய்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரின் சேனையில் மானா செடிகளுடன் 5 அடி உயரமான கஞ்சா செடிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது மொத்தமாக சந்தேக நபரிடமிருந்து பயிரிடப்பட்டிருந்த 1050 கஞ்சா செடிகளும் 1 கிலோ 500 கிராம் காய்ந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மஹியங்கனை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
