இலங்கைக்குள் கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்துவதற்காக கொக்கெய்ன் குளிசைகளை விழுங்கி வந்ததாகக் கூறப்படும் 43 வயதான உகாண்டா நாட்டவர் , கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாயியான குறித்த சந்தேகநபர், உகாண்டாவின் என்டெப்பே நகரிலிருந்து கட்டார் வழியாக பயணித்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டார் எயார்வே நிறுவனத்தின் QR664 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர், கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் மற்றும் ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் குறித்த பயணியை சோதனை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவரது உடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கெய்ன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய 13 குளிசைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த குளிசைகளின் மொத்த நிறை சுமார் 161 கிராம் எனவும், அதில் இருந்த கொக்கெய்னின் சந்தை பெறுமதி சுமார் 72.4 இலட்சம் ரூபாய் எனவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் மேலும் போதைப்பொருள் அடங்கிய குளிசைககளை விழுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், தேவையான பாதுகாப்பு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக மருத்துவப் பரிசோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.










