யாழில் உயிரிழந்த 17 வயது சிறுமி : கொலை என சந்தேகம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்து வீட்டுப்பணி புரிந்து வந்த சிறுமி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் தமது பிள்ளை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வட்டுக்கோட்டை – முதலியார் கோவில் பகுதியைச் சேர்ந்த  கேதீஸ்வரன் சர்மிகா (வயது 17) என்ற குறித்த  சிறுமி நான்கு மாதங்களுக்கு முன்னர் சம்பவம் நடந்த வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு மாதாந்த சம்பளமாக 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அவருக்கு 4 மாதங்களுக்கும் மாதாந்தம் ஐயாயிரம் ரூபாவே வழங்கப்பட்டதாகவும் மிகுதி 80 ஆயிரம் ரூபா வழங்க வேண்டி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமி தனது பெற்நோர் மற்றும் உறவினர்களுடன் பேசுவதற்கு மாதத்தில் ஒரு தடவை மாத்திரமே சிறுமிக்கு தொலைபேசி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சிறுமி வீட்டுக்கு செல்ல முயற்சிக்கும் வேளையில் எல்லாம், சிறுமியின் பெற்றோர் அவரை வீட்டுக்கு வரவேண்டாம் என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்த சிறுமி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளை உயிரிழந்துள்ளார்.

சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து  கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார், சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் சிறுமியின் மரணம் கொலையாக இருக்கும் என சிறுமியின் பெற்றோர் சந்தேகப்படுவதால் உடற்கூற்று பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.