மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பிணையில் விடுவிப்பு : வீட்டு வாசல்களில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 24 ஆம் திகதி மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட ஆறு உழவு இயந்திரங்களும் நேற்று திங்கட்கிழமை தலா ஒருலட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடி படையினரால் ஆறு உழவு இயந்திரங்களுடன், ஆறு சாரதிகளும் கைது செய்யப்பட்டு மருதங்கேணி பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையிலே அன்றைய தினமே மருதங்கேணி பொலிசாரால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு இடம் பெற்றவேளை தலா ஒருலட்சம் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதுடன் உழவு இயந்திரங்களில் இருந்த மணல் மண் நீதிமன்றின் பொறுப்பில் எடுக்கப்பட்டு உழவு இயந்திரங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி வழக்கிற்கு தவணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட உழவு இயந்திர சாரதிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்க்காக குடத்தனை அம்பன் ஊர் எல்லை பகுதியிலிருந்து அம்பன் கிழக்கிலுள்ள ஒவ்வொருவரது வீட்டு வாசல்களிலும் வெடிகளை கொழுத்தியுள்ளனர்.