மட்டக்களப்பில் விபத்து: மின்சாரம் தடை

-வெல்லாவெளி நிருபர்-

களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடம் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் கல்முனை பிரதான சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை ஏற்றும் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த உயர் அழுத்த மின்சாரத் தூணில் மோதியுள்ளது.

அம்பாறைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற வாகனம் மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேளை இவ்வாறு  விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் குறித்த வாகனம் மோதியதில் மின்சார தூண்கள் சரிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்ததுடன் வீதியிலும் விழுந்துள்ளது.

இதன் காரணமாக 3 தொடக்கம் 4 மணி நேரம் குறித்த பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதுடன் 1 மணி நேரம் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் விபத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கான காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக களுவாஞ்சிகுடி பொலிஸார் வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.