
திருகோணமலையில் பொது சுகாதார பரிசோதகருக்கு கொவிட் தொற்று
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை பொது வைத்திய சாலையில் காய்ச்சல் அதிகளவிலான சளி காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதியானவர் கிண்ணியா சுகாதார வைத்திய பணிமனையில் கடமை ஆற்றி வரும் 51 வயது உடைய பொது சுகாதார பரிசோதகர் எனவும் தெரிய வருகின்றது.
இதே வேளை குறித்த பொது சுகாதார பரிசோதகருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையின் கடமை நேர வைத்திய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
அத்துடன் தற்பொழுது கொரோனா தொற்று பரவிக் கொண்டு வருவதினால் முகக் கவசங்களை அணியுமாறும், சமூக இடைவெளிகளை பேணி நடந்து கொள்ளுமாறும், கைகளை தொடர்ச்சியாக கழுவுமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்கள பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.