திடீர் மரண விசாரணை அதிகாரியை நியமிக்குமாறு கோரிக்கை

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை- கோமரங்கடவெல மற்றும் மொரவெவ பிரதேசத்தில் திடீர் மரண விசாரைண அதிகாரி ஒருவர் இன்மையால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கோமரங்கடவெல மற்றும் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் 15000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் இடம்பெறுகின்ற அகால மரணங்களின் போது அவற்றை விசாரணை செய்ய திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் இல்லாததன் காரணமாக சடலத்தை திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டியிருப்பதாகவும் இதனால் வறிய மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதோடு சடலத்தை அடக்கம் செய்ய காலதாமதம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இதேவேளை வயது முதிர்ந்தோர் நோயாளர்கள் வீடுகளில் உயிரிழந்தால் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய இறப்பு அறிக்கையை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆகவே மொரவெவ-கோமரங்கடவல ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உடனடியாக திடீர் மரண விசாரணை அதிகாரியொருவரை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்