ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கு துறைசார் வல்லுனர்கள் விஜயம்

-வாழைச்சேனை நிருபர்-

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை)  பழைய மாணவரும் தற்போதைய இளம் விஞ்ஞானியுமாகிய எம்.ஐ.ஹஸீம்தீன் அழைப்பின் பேரிலும் இலங்கைக்கான சவுதி அரேபிய துணைத்தூதுவர் ஏ.எல்.அனஸ் ஒழுங்குபடுத்தலிலும் பேராதனை பல்கலைகழக இராசயனவியல், நனோ தொழிநுட்பத்தின் பேராசிரியர் காமினி ராஜபக்ச, மின்னியல், இரசாயனவியல் பேராசிரியர் எச்.எம்.என்.பண்டார, இலண்டன் எம்பீரீயல் பல்கலைகழகத்தின் உயிரியல் உணர்திறன் தொழிநுட்ப பேராசிரியர் டானி ஓ கெயார் ஆகியோர் கடந்த ம் திகதி ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) க்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

குறித்த துறைசார் வல்லுனர்களை வரவேற்று உரையாற்றிய பாடசாலையின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், பாடசாலையின் மாணவர் அடைவு மட்டங்கள் சிறப்பாகவுள்ளதனையும் தற்போதும் க.பொ.த உயர்தர தொழிநுட்பவியலில் தொடர்ந்தும் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையிலுள்ளதனையும் நினைவுகூர்ந்தார்.

பாடசாலை மற்றும் பிரதேசத்தின் வரலாறு, தற்போது காணப்படுகின்ற தொழில்துறைகள், அதில் காணப்படும் தொழிநுட்பப்பற்றாக்குறைகள் தொடர்பாகவும் பாடசாலையின் ஆய்வுகூடங்களில் காணப்படுகின்ற பற்றாக்குறைகள் தொடர்பாகவும் பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் செயலாளரும் பிரதித்திட்டமிடல் பணிப்பளாருமான எஸ்.ஏ.றியாஸ் எடுத்துரைக்கப்பட்டது

பேராதனை பல்கலைகழக இராசயனவியல், நனோ தொழிநுட்ப பேராசிரியர் காமினி ராஜபக்ச அவர்களினால் கனிய வளங்களை நனோ தொழிநுட்பத்தினூடாக விருத்தி செய்கின்ற முறைமையையும் மனித உடற்பாகங்களை பயோதீசிசிஸ் ஊடாக அபிவிருத்தி செய்து மனித உடல்களில் மாற்று சிகிச்சை செய்து வெற்றியளித்ததனையும் அதில் ஒரு உடல் பாகத்தை விருத்தி செய்ததில் எமது பிரதேச இளம் விஞ்ஞானி எம்.ஐ.ஹஸீம்தீனின் பங்களிப்பு அளப்பெரியது எனக்குறிப்பிட்டதுடன், கொரோனா கொவிட் காலங்களில் நனோ தொழிநுட்பத்தினூடாக பெறப்பட்ட முகக்கவசம் 99.9 வீதம் கொரோனவிலிருந்து பாதுகாத்த விதத்தினையும் விளக்கினார்.

ஏனைய பேராசிரியர்களினாலும் விளக்கமளிக்கப்பட்டதுடன், பாடசாலையின் சார்பில் அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வைபவத்தை பாடசாலையின் உதவி அதிபர் ஏ.எல்.அனஸ் தொகுத்து வழங்கினார்.

வைபவத்தைச் சிறப்பிக்குமுகமாக இப்பாடசாலையின் பழைய மாணவர்களான தென்கிழக்கு பல்கலைகழக பேராசிரியர் எம்.சீ.ஏ.நாசர், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி, காழி நீதிபதியும் சட்டத்தரணிமாகிய ஈ.சகாப்தீன், முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.எல்.ஜுனைத் நளீமி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தொழில் வழிகாட்டல் அதிகாரி ஏ.எம்.ஹனீபா, முன்னாள் வர்த்தக சங்கத்தலைவர் எம்.சீ.ஏ.நியாஸ் ஹாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்