
வழுக்கை பிரச்சினைக்கு காப்பீடு!
வழுக்கைப் பிரச்சினையுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் தென்கொரிய ஜனாதிபதி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
முடி உதிர்தல் சிகிச்சைகளுக்கான செலவை தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் ஏற்க வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே-மியுங் பரிந்துரைக்கிறார்.
முடி உதிர்தலுக்கான மருத்துவ சிகிச்சைகள் முன்பு “அழகு சார்ந்ததாக” கருதப்பட்டன, ஆனால் தற்போது அவை “வாழ்வாதாரம் சார்ந்த விடயமாக” பார்க்கப்படுகின்றன என்று லீ ஜே-மியுங் குறிப்பிட்டார்.
தற்போது தென்கொரியாவின் தேசிய சுகாதாரக் காப்பீடு, சில மருத்துவக் காரணங்களால் ஏற்படும் முடி உதிர்தல் சிகிச்சைகளுக்கு மட்டுமே நிதி வழங்குகிறது.
ஆனால், பரம்பரை ரீதியான முடி உதிர்தல் ஒருவரின் உயிருக்கோ அல்லது ஆரோக்கியத்திற்கோ அச்சுறுத்தலாக இல்லாததால், அது இக்காப்பீட்டில் சேர்க்கப்படவில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜியோங் உன்-கியோங் அண்மையில் நடந்த கூட்டத்தில் விளக்கினார்.
அதற்குப் பதிலளித்த லீ,”பரம்பரை ரீதியாக வரும் நோயை ஒரு நோயாக வரையறுப்பதா, இல்லையா என்பது மட்டும்தானா இங்கே கேள்வி?” என்று கேட்டார்.
லீ-யின் இந்த முன்மொழிவு சமூக ஊடகப் பயனாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடுமையான அழகுத் தரநிலைகளுக்குப் பெயர் பெற்ற தென்கொரியாவில், வழுக்கை என்பது ஒரு சமூகத்தில் இழிவாகக் கருதப்படுகிறது.
இது குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
கடந்த ஆண்டு முடி உதிர்தல் பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்ற 240,000 பேரில், 40 சதவீதத்தினர் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தென்கொரியாவின் தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் கடந்த ஆண்டு 11.4 டிரில்லியன் வோன் என்ற அளவிலான பற்றாக்குறையைச் சந்தித்தது.
அந்நாட்டின் முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், இந்தத் திட்டம் மேலும் நிதி நெருக்கடிக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
இந்த நிதிச் சுமையைக் குறைக்க, முடி உதிர்தல் சிகிச்சைகளுக்கு குறிப்பிட்ட வரம்புகளை விதிக்கலாம் என்று ஜனாதிபதி லீ தெரிவித்தார்.
முடி உதிர்தலுக்கு முன்னதாக, மிகவும் தீவிரமான நோய்களுக்கு அரசு நிதி ஒதுக்க , வேண்டும் என்று கொரிய மருத்துவ சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் அந்நாட்டு ஜனாதிபதி தனது முடிவுகளில் தீவிரம் காட்டி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
