மூடப்படும் சிரிய சிறைச்சாலைகள் – கிளர்ச்சி படைத் தலைவர் அறிவிப்பு!

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாடினால் நடத்திச் செல்லப்பட்ட சிறைச்சாலைகள் மூடப்படவுள்ளதாக சிரிய கிளர்ச்சிப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சிறைச்சாலைகளில் கைதிகளைக் கொலை செய்தல் அல்லது சித்திரவதை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரிய கிளர்ச்சி படை தெரிவித்துள்ளது.

அபு முகமது அல்-ஜோலானி (Abu Mohammed al-Jolani) என அழைக்கப்படும் கிளர்ச்சிப்படைத் தலைவரின் அறிக்கையினை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளன.

சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட கடுமையான தாக்குதல் காரணமாக அரசாங்க படைகள் அங்கிருந்து வெளியேறின.

அத்துடன்,  சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாட்டும் டமஸ்கஸை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்த நிலையில்,  மனித வதை முகாம் என்று குறிப்பிடப்படும் சைட்னயா (Saydnaya) சிறைச்சாலையில் இருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் கிளர்ச்சியாளர்களினால் விடுவிக்கப்பட்டனர்.

பஷர் அல்-அசாட்டினால் நடத்திச்செல்லப்பட்ட சிறைச்சாலைகளில் சுமார் 60,000 கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.