மயிலத்தமடு மேய்ச்சல்தரை விவகாரம் : யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை
-யாழ் நிருபர்-
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை போராட்டம் தொடர்பான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரைகள் காலங்காலமாக அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களினால் தமது கால்நடைகளை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.
அண்மைய வருடங்களில், இந்தப் பிரதேசங்களில் இலங்கை அரசினால் சட்ட விரோதமான முறையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இந்தக் குடியேற்றங்களின் காரணமாக மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரைப் பிரதேசங்களினைத் தமிழ் கால்நடைவளர்ப்பாளர்கள் பயன்படுத்துவது தடைப்பட்டிருக்கிறது.
மேய்ச்சல் தரையினைப் பயன்படுத்தும் தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் மேய்ச்சலுக்கு விடப்பட்ட அவர்களின் கால்நடைகளின் மீதும் வன்முறை பிரயோகிக்கப்படுகின்றது.
கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மேய்ச்சல் தரை மீது இதுவரை இருந்த உரித்து அகற்றப்பட்டமை அவர்களின் பொருளதாரத்தின் மீதும், வாழ்வாதாரத்தின் மீதும் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் இந்தப் பகுதியில் ஒரு புத்தர் சிலையும் நாட்டப்பட்டது. இந்த உரிமை மீறல் தொடர்பிலே பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களது ஆதரவாளர்களும் பல மாதங்களாக அமைதி வழியிலே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அத்துமீறல் செயன்முறையினையும், வன்முறையினையும் கண்டிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினையும் கிழக்குப் பல்கலைக்கழகத்தினையும் சேர்ந்த தமிழ் மாணவர்கள் ஓர் அமைதிப் போராட்டத்திலே கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி அன்று இந்தப் பிரதேசத்திலே ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக ஒன்றுகூடினர் என்ற தோரணையிலே, இந்தப் போராட்டத்திலே ஈடுபட்ட மாணவர்களிலே பலர் சந்திவெளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அமைதி வழியில், கால்நடை வளர்க்கும் மக்களின் மேய்ச்சல் தரை மீதான உரித்துக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடிய பல்கலைக்கழக மாணவர்களினைப் பொலிஸார் கைது செய்தமையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மாணவர்களின் ஜனநாயக உரிமையின் மீது மேற்கொள்ளப்பட்ட மீறலாகவே இந்தக் கைதுகளை நாம் பார்க்கிறோம். வடக்குக் கிழக்கிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் மக்களையும் மாணவர்களையும் கைது செய்யும் போக்குத் தொடர்வதனை நாம் இங்கு சுட்டிக்காட்டுகிறோம், என்றுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்