மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் இன்மையே தொடர் அழிவுகளை விவசாயிகள் எதிர்கொள்ள காரணம்

மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் தொடர்பில் எந்தவித திட்டங்களும் இல்லாத காரணத்தினாலேயே தொடர்ச்சியான அழிவுகளை விவசாயிகள் எதிர்கொண்டுவருவதுடன் வருடந்தோறும் நீர்ப்பற்றாக்குறையினையும் எதிர்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகாரசபையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகாரசபையின் ஊடக சந்திப்பு இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகாரசபையின் உதவிச்செயலாளர் ஜெ.நிரஞ்சனகுமார் இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 25ஆம் திகதி தொடக்கம் பெய்த கனமழை காரணமாக கூடுதலான வெள்ளப்பாதிப்பினை எதிர்கொண்டது. இவ்வாறான வெள்ள அனர்த்தங்கள் காரணமாக விவசாயிகள் தொடர்ச்சியான பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றார்கள். முதலீடுகளை செய்வதும் அது இல்லாமல்போவதும் பின்னர் நஸ்ட ஈடு என்று கூறிக்கொண்டு சிறியளவிலான தொகையே வழங்கப்படுகின்றது. ஏக்கருக்கு 2500ரூபாவே நஸ்ட ஈடாக வழங்கப்படுகின்றது. இதனைக்கொண்டு என்ன செய்யமுடியும். இந்த முறையாவது நியாயமான நஸ்ட ஈட்டை வழங்கவேண்டும். ஒரு மூடை உரம் 10 ஆயிரம் ரூபா செல்கின்றது, ஒரு மூடை விதை நெல் 10 ஆயிரம் ரூபா முடிகின்றது. தற்போது ஒரு பயிராக வேளான்மையுள்ளது. அதற்கு சுமார் 60 ஆயிரம் 70 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு திணைக்களங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சரியான மதிப்பீட்டை செய்து சரியான நஸ்டு ஒன்றிணை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும்.

இந்த மாவட்டத்தில் இவ்வாறான வெள்ள நிலைமை ஏன் தொடர்ச்சியாக ஏற்படுகின்றது. இன்று உலகத்திலே நீர்ப்பிரச்சினையே பெரும் பிரச்சினையாகவுள்ளது. தண்ணீர் இல்லாமல் எத்தனையோ நாடுகள் தவிர்த்துவருகின்றது. இந்த நாட்டில் மழை நீர் அனைத்து வீண்விரயமாக கடலில் சேர்க்கவிட்டுவிட்டு இரண்டாம் மாதமளவில் குடிக்கநீர் இல்லாத நிலைமை இந்த மாவட்டத்தில் ஏற்படுகின்றது. இந்த நாட்டில் நீர்முகாமைத்துவம் ஒரு வீதம் கூடயில்லை. இந்த மாவட்டத்தில் நீர்முகாமைத்துவம் எதுவும் இல்லை. சிறியளவில் கூட இந்த மாவட்டத்தில் நீர்முகாமைத்துவம் இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைக்குளம், நவகிரிகுளம், கித்துள்குளம் என ஒன்பது பெரிய குளங்கள் பாரிய நீர்பாசன திட்டத்தின் கீழ் மத்திய நீர்பாசன திணைக்களங்களுக்குள் உள்ளன.

அதேபோன்று 13 நடுத்தர குளங்கள் மாகாண நீர்பாசன திணைக்களங்களுக்குள் உள்ளன.
இதனைவிட 480 சிறிய குளங்கள் காணப்படுகின்றன. இவை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இருக்கின்றது. இந்த 480 குளங்களையும் பராமரிக்ககூடிய கொள்ளளவு கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் இல்லை. அதனால் வெள்ளநீர் வீண்போகும் நிலையே காணப்படுகின்றது. சேமிக்கும் நிலைமைகள் இல்லை.

கண்டியனாறு குளம், கித்துள், உறுகாமம் குளங்கள் திட்டம், கற்பாறைக்குளம் போன்ற மூன்று திட்டங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவேற்றினால் வெள்ளப்பிரச்சினையை 75வீதம் குறைப்பதுடன் மேலும் 40 ஆயிரம் ஏக்கர் காணிகளில் விவசாய நடவடிக்கையினை முன்னெடுக்கமுடிவதுடன் குடிநீர் பிரச்சினையையும் தீர்க்கமுடியும்.

ஒரு சாதாரண விவசாயிக்கு கிடைத்த விடயம் கூட இந்த அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாத நிலையிருக்கின்றது என்பது மிகவும் பாரிய கவலையான விடயமாகவுள்ளது.