
மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்
மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் அருள்ராஜா பிரேமாகரன் வீட்டின் மீது நேற்று திங்கட்கிழமை இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
போரதீவுப்பற்று பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடும் அருள்ராஜா பிரேமாகரன் சம்பவதினமான நேற்று இரவு மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் அவரது மனைவி பிள்ளைகள் உறங்கி கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் இனம் தெரியாதோரால் வீட்டின் மீது பெற்றோல் குண்டுதாக்குதல் மேற்கொண்டதையடுத்து வீட்டின் கூரை வீழ்ந்து வீட்டின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீற் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.