புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் நாளைய தினம் வியாழக்கிழமை பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவித்தலொன்றை விடுத்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர இதனைத் தெரிவித்துள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், நாடாளுமன்றத்திற்கு வருகைதரும் உறுப்பினர்களின் வாகனங்கள் காவல்துறையினரால் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்துமிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உறுப்பினர்களுக்கான கூட்டத்துக்குச் சென்று, அழைப்பு மணியோசை எழுப்பப்படும் வரையில் அங்குத் தங்கியிருத்தல் வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களது கணவன் அல்லது மனைவியுடன் வருகின்ற உறுப்பினர்கள், அலுவலர்களுக்கான நுழைவாயில் அருகில் இறங்க வேண்டும் எனவும் ஏனைய உறுப்பினர்கள், உறுப்பினர்களின் நுழைவாயிலின் அருகில் இறங்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.