பதுளை செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு
-பதுளை நிருபர்-
பதுளை செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து இன்று ஞாயிற்றுக்கிழமை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ஆம் கட்டை பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து வீதியில் விழுந்தமையினால் கடந்த 6 நாட்களாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களின் துரித முயற்சியால் கற்பாறைகள் அகற்றப்பட்டு இன்று நண்பகல் 12 மணியளவில் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து ஒற்றை வழி போக்குவரத்தாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வீதியின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகளும் பொதுமக்களும் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பதுளை மாவட்ட அரசாங்க அதிபர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பசறை பிரதேச செயலாளர், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து கலந்தாலோசித்த பின்னரே இன்றைய தினம் வீதி திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும் வீதி திறக்கப்பட்டாலும் காலநிலைக்கு ஏற்ப தேவை ஏற்படின் வீதியை மூடுவதற்கான சகல அதிகாரங்களும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு குறித்த வீதி மூடப்படும் என பதுளைமாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.