நீதிமன்றத்திற்குள் வைத்து பெண் மீது கத்தி குத்து

கொழும்பில் நீதவான் நீதிமன்றில் வைத்து நேற்று வியாழக்கிழமை பெண்ணொருவரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்துவிட்டு தப்பி ஓடிய நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பூகொட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தனது வீட்டில் இருந்து ஐந்து பவுண் தங்க நகைகளை காணவில்லை என தனது சகோதரனை சந்தேகிப்பதாக பெண் பாதுக்க பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார். பின்னர் வீட்டுக்குச் செல்வதற்காக நீதிமன்றத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்ல முற்பட்ட போது முச்சக்கரவண்டியில் வந்த நபர் கூரிய ஆயுதத்தால் கழுத்தில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை மோசமாக இல்லை எனவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்