
நாட்டில் டெங்கு நோய் அபாயம் அதிகரிப்பு
நாளை திங்கட்கிழமை விசேட டெங்கு தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த வருடத்தில் இதுவரை 43,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்த மாதத்தில் மட்டும் 8,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்நிலை தொடருமானால் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பூச்சியியல் ஆய்வு அறிக்கைகளின்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமான வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்கள், நுளம்புகள் எளிதில் உற்பத்தியாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களும் நாளை ஒரு மணிநேரம் தமது வளாகங்களை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.