-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலக மட்டத்திலான இடமாற்றம் தாபன விதிக்கோவைக்கு முரணானது இதனை மீள் பரிசீலனை செய்யுமாறு வழியுறுத்தி திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை இணைந்த சேவை உத்தியோகத்தர்களினால் இவ் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
இடமாற்ற சுற்றறிக்கையில் பழிவாங்கும் நோக்கத்துடன் தூரப் பகுதிகளுக்கு பிரதேச செயலக ரீதியில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை உத்தியோகத்தர்களை உடல்,உள ரீதியாக பாதிக்க வைத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் கவலை தெரிவித்தனர்.அத்தோடு இடமாற்றத்தில் பிரதேச செயலகங்களுக்கிடையிலும் ஆண்,பெண் என்ற ரீதியிலும் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டி காட்டுகின்றனர்.
கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் நீதியான இடமாற்றம் வேண்டும், பாரபட்சமற்ற இடமாற்றத்தை ஏற்படுத்துங்கள், நியாயமற்ற இடமாற்றத்தினை உடனடியாக திரும்ப பெறவும் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.