ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

வாக்களிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 39 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் மொஹமட் இல்யாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில் 38 பேர் இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 41 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, விசேட தேவையுடையோர்கள் வாக்களிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, பார்வையற்றோர் வாக்களிப்பதற்காக வேட்பாளர்களின் சின்னங்களைத் தொட்டு உணரக்கூடிய வாக்குச் சீட்டுக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

அதேநேரம் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காகப் பூதக்கண்ணாடி உள்ளிட்ட விசேட சாதனங்களை வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.