
குரங்குகள் மீது பழி போட வேண்டாம் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடைக்கு குரங்குதான் காரணம் எனக் கூறுவது பொருத்தமில்லாத கருத்து எனவும், இதற்கான நிரந்தரமான தீர்வை அரசாங்கம் விரைவில் வழங்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? போன்ற பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும்.
அத்தோடு , எமது நாட்டில் தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதாகவும் இதற்கு மின் தடையே பிரதான காரணமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் .
மேலும் ,இந்த ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தி உற்பத்திக்கு ஏற்ப விநியோகம் இடம்பெறாவிட்டால் மின் தடை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்க தரப்பில் பதில் வழங்க வேண்டும்.
இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம். மின்தடைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை நாட்டுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும், என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்