Last updated on April 28th, 2023 at 05:39 pm

எம்டி நியூ டயமண்ட் கப்பல் தீ விபத்து : இலங்கையால் நட்டஈடு பெற முடியாது

எம்டி நியூ டயமண்ட் கப்பல் தீ விபத்து : இலங்கையால் நட்டஈடு பெற முடியாது

2020 செப்டம்பரில் எம்டி நியூ டயமண்ட் ( MT New Diamond) கப்பல்,  சட்டமா அதிபரின் உத்தரவுக்கு முரணாக கப்பல் விடுவிக்கப்பட்டதன் காரணமாக இலங்கையால் நட்டஈடு பெற முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

3 செப்டம்பர் 2020 அன்று, மிகப் பெரிய கச்சா கப்பலான MT New Diamond  இலங்கையின் மேற்குக் கடற்கரையில் தீப்பிடித்தது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு இடைவிடாது எரிந்த பிறகு, செப்டம்பர் 11 ஆம் திகதிக்குள் தீ அணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது,  பின்னர் கப்பல் விடுவிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, உரிய நட்டஈடு கிடைக்கும் வரை கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து விடுவிக்கக் கூடாது என சட்டமா அதிபர் அப்போது பணிப்புரை வழங்கியதாக குறிப்பிட்டார்.

சட்டமா அதிபரின் உத்தரவை மதிக்காமல், அப்போதைய வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே, கப்பலை விடுவிக்குமாறு இலங்கை கடற்படைக்கு அறிவுறுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

‘இந்த நடவடிக்கையால் கப்பல் விபத்து தொடர்பான தேவையான இழப்பீடுகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் மூன்று தனித்தனி வழக்குகளை தாக்கல் செய்துள்ளோம், ஆனால் எங்களால் இழப்பீடு பெற முடியவில்லை. கப்பலுக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் எங்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை ‘என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அன்றைய கரையோரப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா,  தான் அமைச்சராக இருந்த போதிலும் கப்பலை விடுவிப்பதற்கான உத்தரவு தன்னால் பிறப்பிக்கப்படவில்லை என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கப்பலை விடுவிக்குமாறு இலங்கை கடற்படைக்கு அப்போதைய வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே அறிவுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் கொடஹேவா மேலும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களின் கீழ் வருவதால் தாம் இதில் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்