இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு உதவியளிக்க சர்வதேச நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெறும்.

48 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன்வசதியின் கீழ் இலங்கைக்கு குறித்த தொகை வழங்கப்படும்.

இந்த மாத ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக இலங்கைக்கு பாரிஸ் கிளப், சீனா, இந்தியா உள்ளிட்ட உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்தது.

இந்தநிலையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு முதல் கட்டமாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இது குறித்து கருத்துரைத்துள்ள  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டேலினா ஜோர்ஜியேவா, இலங்கையில் நிறுவனங்கள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளுக்கு ஆழமான சீர்திருத்தங்கள் தேவை என வலியுறுத்தியுள்ளார்.

அதிக பணவீக்கம், குறைக்கப்பட்ட கையிருப்பு, நீடித்து நிலைக்க முடியாத பொதுக் கடன் மற்றும் உயர்ந்த நிதித்துறை பாதிப்புகளுக்கு மத்தியில் கடுமையான மந்தநிலையுடன் இலங்கை மிகப்பெரிய பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொண்டுள்ளது.

நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு,  சீர்திருத்தங்களுக்கான வலுவான உரிமையுடன் கூடிய நீட்டிக்கப்பட்ட கடன்வசதியின் ஆதரவு வேலைத்திட்டத்தை விரைவாகவும் சரியான நேரத்தில் அமுல்படுத்துவதும் முக்கியமானதாகும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டேலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.